ஜனா எம்.பியின் உரைத்தொகுப்பு

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் (ஜனா) மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஜனாதிபதி ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரைமீதான ஒத்திவைப்புவேளை, விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ. கருணாகரம் (ஜனா) இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் (ஜனா);

ஜனாதிபதியினுடைய கொள்கைப் பிரகடன உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவேன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டது போன்றே தோன்றுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற, இலங்கையின் புரையோடிப்போன வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சிங்களத் தலைவர்கள் பார்க்கின்ற பார்வை விநோதமானதே.

இப்போது சர்வ கட்சி அரசாங்கத்திடம் தமிழர்களின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது;

  • நில அபகரிப்பை நிறுத்த வேண்டும்;
  • அபகரித்த நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்;
  • வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்;
  • பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்;
  • தமிழரின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும்;
  • அவற்றினை விடவும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படுதல் வேண்டும் போன்றவைகளே.

இந்த நாட்டுக்கு சர்வகட்சி ஆட்சியே தேவை. இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நடந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு இதுவரை தீர்வில்லை. கடந்த கால வரலாறுகளை நாங்கள் திரும்பிப் பார்ப்போமானால், இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே தமிழ் மக்கள் இரணடாம் தரப் பிரஜைகளாக பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான அநீதியும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே 49இல் டி.எஸ். சேனாநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத்தை கல்லோயாத் திட்டத்தின் ஊடாக முயற்சித்தது மட்டுமல்லாமல் நடைமுறைப்படுத்தினார். 1921ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 0.5வீதம். ஆனால், இன்று 24 வீதமாக உயர்ந்ததற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இருந்தது மட்டுமல்லலாமல், 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதும்தான். அன்றிலிருந்து அகிம்சை ரீதியாகவும், ஆயத ரீதியாகவும் போராடி இன்று ஒரு ஜனநாயகப் போராட்டத்தில் இருக்கின்றார்கள்.

ஆனால், பண்டா - செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை புத்த பிக்குகளுடன் சென்றார். டட்லி - செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது, சிறிமாவோ பண்டாரநாயக்கா எதிர்த்தார். ஆனால், 2000ஆம் ஆண்டுகளில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் நீலன் திருச்செல்வம், ஜீ.எல். பீரிஸ் போன்றவர்களின் முயற்சியில் ஒரு தீர்வுப் பொதி உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்வுப் பொதி இன்றுவரை நல்ல தீர்வுத் திட்டமாகப் இருந்தது என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அன்றைய அந்தத் தீர்வுப் பொதியை இன்றைய ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்த்திருந்தார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழ் போராட்ட இயக்கங்களில் கூடுதலானவை அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டுவிட்டன. 1989இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றியிருந்தோம். அன்றைய காலத்தில் எம்.ஈ.பி. யை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பிரதமர் அவர்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கு வைத்திருந்தார்.

நாங்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கமாக அவருடைய வீட்டுக்குச் சென்று அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக நீண்ட பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீங்கள் பிரதமராக இருந்து தொடங்கி வைத்த முயற்சி பயனற்றுப் போனது. உங்களுடைய ஜனாதிபதி பதவிக்காலத்தில் இப்போது நீங்கள் கூறியிருக்கின்ற புதிய அரசியலமைப்பு மாற்றம், தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதென்பது தமிழர்களின் பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு முன்வைக்கப்பட்டபின்னரே சாத்தியமாகும் என்பது சிங்களத் தலைவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும். இல்லாது போனால் உங்களுடைய புலம்பெயர் தமிழர்களை உதவிக்களைக்கும் முயற்சி பயனற்றதாகவே ஆகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வதற்கான பல்வேறு வழிகளை ஜனாதிபதியவர்கள் அவருடைய உரையில் முன்வைத்திருக்கிறார். அவை அனைத்துமே நடைமுறைக்கு வருமானால் பாராட்டப்படத்தக்கதாக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் நிம்மதியடைய வேண்டும். மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும்.

போராட்டக்காரர்களால் உருவாகியிருக்கின்ற இந்த மாற்றத்தை பாராட்டாமலிருக்க முடியவில்லை. ஆனால் போராட்டக்காரர்களைக் கைது செய்வதும், தடுத்து வைப்பதும், கடத்துவதும் கண்டனத்துக்குரியதாகும். இந்தக் கைதுகள், நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை எனக் கூறிக்கொண்டு அடக்குமுறையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என உற்பத்தித் துறைகள் காணப்படுகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் கிழங்கு உற்பத்தி, வெங்காய உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு அறுவடை நடைபெறுகின்ற வேளை வெளிநாடுகளிலிருந்து அதே உற்பத்திகளை இறக்குமதி செய்வதும், எமது விவசாயிகளுக்கான உரம் வழங்கல் பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களின் நேர அட்டவணைக்கு ஏற்ப நடைபெறுவதும், அவர்களுடைய அறுவடைக் காலத்துக்கு ஏற்ப நெல் சந்தைப்படுத்தல், சபை நெல்லைக் கொள்வனவு செய்தலும், விலை நிர்ணயம் நடைபெறுவதும் பாரபட்சமான விடயமாகும். இதில் மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும்.

இன்று யூரியா பசளை 65ஆயிரம் மெற்றிக் தொன் வர இருந்தும், 40ஆயிரம் மெற்றிக் தொன் மட்டுமே இலங்கைக்கு வந்திருக்கின்றது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 216 மெற்றிக் தொன் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் கூறப்படுவது, மட்டக்களப்பு அம்பாரையில் அறுவடை முடிந்துவிட்டதென்றும். அனுராதபுரம், பொலநறுவையில் விதைப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த 25 மெற்றிக் தொன் வரும்போது மட்டக்களப்பில் பெரும்போக விவசாயம் தொடங்கப்பட்டுவிடும். எனவே, பெரும்போக விவசாயம் செய்வதற்காவது யூரியாவைக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடுகின்ற அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும். மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும்.

இன்று இலங்கையின் நிலையை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையும் நடக்கின்றது. கடந்த 03.08.2022 இரவு 8.40 மணியளவில் கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னாள் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனது கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கின்றார். இந்த நிலைமை மாறவேண்டும்.

இதற்கும் மேலாக, பொருளாதாரம் ஆதாலபாதாளத்துக்குள் சென்றிருந்தது. முன்னைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களது மடத்தனமான, மூடத்தனமான நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் ஆதாலபாதாளத்துக்குள் சென்றிருந்தாலும், அவர் நாட்டைவிட்டு சென்றிருந்தாலும் இருப்பதற்கு ஒரு நாடு இல்லாமல் இருக்கின்றார். அந்த வேளையில் இந்தியாதான் பொருளாதார உதவியை வழங்கியிருந்தது. ஏற்கனவே கடன் வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கிரடிற் லைன் மூலமாக கிட்டத்தட்ட நான்கு மில்லியயனுக்கும் அதிகமான உதவிகளைச் செய்திருந்தார்கள். எரிபொருள் உதவி, மருந்துப் பொருள்களையும் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

பூகோள அரசியலில் இலங்கையர்ளை பகடைக்காயாக சீனா பயன்படுத்துகின்றது. அயல் நாடான இந்தியா அனைத்து நேரங்களிலும் எமக்கு ஆதரவாக இருக்கின்றபோது, நாங்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, இந்தியாவை எவ்வேளைகளிலும் பகைத்துக் கொள்ளக்கூடாது.

ஜனா எம்.பியின் உரைத்தொகுப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)