
posted 31st August 2022
முன்பு திரையரங்குக்கு குடும்பம் குடும்பமாகச் சென்று படம் பார்த்தபொழுது அழிவுறாத கலாச்சாரம் இன்று தனிமையில் ஒரு சிமாட் போன் பாவனையினால் அழியும் கலாச்சாரம் மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலையில் ஒரு திரையரங்கு திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்து உரையாற்றும்போது;
பேசாலையில் முன்பு இயங்கிக் கொண்டிருந்த திரையரங்கானது நீண்ட காலங்களாக இயக்க முடியாத நிலையிலிருந்து தற்பொழுது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
இது மக்களின் பொழுது போக்குக்கு மாத்திரம் அல்ல, கலையை வளர்ப்பதற்காகவே இவ் அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில்; ஒரு கலாச்சார ரீதியாக மற்றவர்கள் போற்றக் கூடியளவுக்கு வாழ்ந்தவர்கள்தான் எமது தமிழினம்.
தற்பொழுது எமது இனத்தின் கலாச்சாரத்தில் பல கேள்விக்குறிகள் எழுந்து விட்டன.
முன்பு எமது இளம் சமூகத்திடமிருந்த கலை கலாச்சார உணர்வுகள் இன்றைய எமது இளம் சமூகத்திடமிருந்து மறைந்து போகும் சூழ்நிலை காணப்படுவது கவலையைத் தருகின்றது.
ஆரம்ப காலத்திலிருந்து திரையரங்குகள் பல முக்கியமான இடங்களில் காணப்பட்டன. அப்பொழுது அதிகமானோர் குடும்பம் குடும்பமாகச் சென்று படங்கள் பார்ப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் அப்பொழுது எமது தமிழனத்தின் கலாச்சாரம் அழிந்து போகவில்லை.
ஆனால் இப்பொழுது சிமாட் போன் ஒன்றை வைத்துக் கொண்டு தனிமையில் பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தீய கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளது.
இத் திரையரங்கை முன்னெடுத்துச் செல்லும் திரு. சுரேஸ் அவர்களிடம் கேட்டேன், இந்த திரையரங்கை இப்பொழுது திறக்கும் நோக்கம் என்ன? என வினவியபோது, அவர் கூறியதாவது, வளர்ந்து வரும் கலைஞர்களை வளர்த்தெடுக்கவும், அவர்களால் உருவாக்கப்படும் குறும்படங்களை வெளிக்கொணரும் நோக்குடனே என்றார்.
பலர் தங்களால் உருவாக்கப்படும் சமூதாயத்துக்கு ஏற்றவிதமாக எடுக்கப்படும் குறும் படங்களை வெளியீடு செய்ய முடியாது கஷ்டப்படுவதை உணர்ந்தவனாகவே இதற்கான முயற்சியை எடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)