
posted 30th August 2022
சாடி முறையிலான அன்னாசி பயிர்ச்செய்கை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் வெற்றியளித்துள்ளதாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபன் தெரிவித்தார்.
நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் செயற்படுத்தப்படுகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிர்ச்செய்கை மேற்கொள்ளபடுகிறது. 300 அன்னாசிக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டு தற்பொழுது அவை அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபனின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் குறித்த பாடவிதானத்தை கற்கும் மாணவர்களின் உதவியோடு நகர்ப்புற சாடி முறையிலான அன்னாசிச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
நகர்ப்புறங்களிலும் பழ உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்ற ஒரு உறுதியோடு சாடி முறையிலான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம் என்ற செயற் திட்டத்தை ஆசிரியர் ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான செயற் திட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் உணவு கிடைக்காமை மற்றும் உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும்.
அதாவது, வீடுகளில் மர நிழல்களின் கீழ் குறித்த பயிர்ச் செய்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும். அத்தோடு சாடிகளில் இதனை செயற்படுத்துவதன் காரணமாக நிலம் தட்டுப்பாடான எல்லா இடங்களிலும் இந்த பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்.
தற்பொழுது அன்னாசி போன்ற பழங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறான பல பயிர்களை நகரப்பகுதிகளில் மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் இலாபத்தினை இலகுவாக ஈட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)