எரிவாயு விலை குறைப்பு

நாட்டில் நிலவி வந்த சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிவர்த்திக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று (08) நள்ளிரவு முதல் குறித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின்விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை 5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விலைக்குறைப்பு மக்களின் வாழ்க்கைச் செலவு உச்சம் தொட்ட நிலையில் ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவற்றுக்கெல்லாம் விலை அதிகரிப்பு செய்யும் போது கூடிய தொகையை அதிகரிப்பதாகவும், குறைக்கும் போது அது சிறிய தொகையாகவே அமைவதாகவும் பலர் சலிப்புடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பையடுத்து, தேனீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரியைமாளர்கள் சங்கத்தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஆனால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான மா மற்றும் எண்ணெய் வகைகளின் விலைகளில் குறைவு ஏற்படாதவரை விலைக் குறைப்பு சாத்தியமில்லையென உள்ளுர் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எரிவாயு விலை குறைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)