
posted 18th August 2022
தமிழகத்தின் இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் யுவான் வாங் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.
அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காக சர்வதேச கடல் எல்லைப் பகுதிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு வலயத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நேற்று காலை முதல் ஹெலிகொப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாக கண்காணித்து வருகின்றன.
மேலும் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)