
posted 1st August 2022
ஆவணி மாத மடு பெருவிழாவுக்காக பக்தர்கள் அதிகமானோர் கலந்து கொள்ள இருப்பதனால் வழமைபோன்று சகல ஆயத்ததங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
எதிர்வரும் ஆவணி மாதம் 15 ந் திகதி (15.08.2022) நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் பெருவிழா தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான ஆயத்த கலந்துரையாடல் நடைபெற்றது.
திங்கள் கிழமை (01.08.2022) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார், மற்றும் இது தொடர்பான திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவ் ஆவணி மாத பெருவிழாவுக்கு குறைந்தது நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இவ் விழாவை முன்னிட்டு ஏற்கனவே மடுத் திருத்தலத்திலுள்ள 380 வீடுகளும் பக்தர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் இவ் பெருவிழாவை முன்னிட்டு வீடுகளுக்காக விண்ணப்பித்திருப்பதாகவும், மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் இக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இவ் விழாவுக்காக தற்பொழுது ஓரிரு குடும்பங்கள் வரத் தொடங்கியுள்ளதுடன் கூடாரங்கள் அமைத்து தங்குவதில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருகை தருபவர்களுக்கான உணவுகள், போக்குவரத்துக்கள், குடிநீர், சுகாதாரம், மின்சார வசதிகள், பாதுகாப்பு போன்ற சகல வசதிகளும் கடந்த காலங்களைப் போன்று மேற்கொள்வதற்கான சகல எற்பாடுகளும் மேற்கொள்வது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மற்றும், மடு ஆலயப் பகுதிக்குள் ஒழுக்க சீர்கேடுகள் நடைபெறாதிருக்கும் முகமாக பலத்த பாதுகாப்புக்கள், கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இப் பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தங்கள் தொடர்பாக இவ் விழாவுக்கான இறுதி கலந்துரையாடல் எதிர்வரும் 9 ந் திகதி (09.08.2022) மடு ஆலய பரிபாலகரின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆடி மாத பெருவிழாவின்போது போக்குவரத்துக்கான எரிபொருள் கஷ்டநிலை காணப்பட்டபோதும் எதிர்பார்க்காத நிலையிலும், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தபோதும், திட்டமிட்டபடி சகல திணைக்களங்களும் மிகவும் திறமையாக செயல்பட்டதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம், அரச அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இம்முறையும் அனைத்து திணைக்களங்களும் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என தாங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் மேலும் இக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)