
posted 25th August 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது.
ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகம் 23.08.2022 காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் ஆலய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
ஆறுமுக நாவலரின் உருவச் சிலையை சிவஶ்ரீ கெங்காதரக் குருக்கள் திரைநீக்கம் செய்து, தீபாராதனை காட்டித் திறந்து வைக்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து வணக்கம் செய்தார்.
கொடை வள்ளலார் சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலையை பரமேஸ்வரன் ஆலயப் பிரதம குருக்கள் திரைநீக்கம் செய்து, தீபாராதனை காட்டித் திறந்து வைக்க சேர். பொன். இராமநாதனின் வழித் தோன்றலான என். தியாகராஜா மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபையின் அனுசரணையுடன் நடத்தப்படவுள்ள வேதாகமப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)