
posted 23rd August 2022
சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத் தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
நேற்று (22) முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்கச் சென்ற விவசாயிகள், இவ்வாறு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுத் தருமாறு தெரிவித்தே விவசாயிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிறிமோகன், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்புடன் பேசி விரைவான நடவடிக்கை எடுப்பதாக அவர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில், அறுவடைக்கு தேவையான டீசல் கிடைக்காதவிடத்து, தாம் காலபோக செய்கையை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன்;
சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், தேவையான டீசல் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக மாவட்டத்துக்கு டீசல் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் விவசாயச் செய்கைகளை கால்நடைகள் சேதமாக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த அறுவடையை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபோகச் செய்கையை முழுமையாக நிறைவு செய்ய முடியாத எமது விவசாயிகள், காலபோகச் செய்கை தொடர்பில் பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)