
posted 9th August 2022
இலங்கையின் முக்கிய விவசாய மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
இரசாயன உரத்தட்டுப்பாடு, உரவிலையேற்றம், கிருமிநாசினிகள் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயிகள் இம்முறை சிறுபோக நெற்செய்கையை முன்னெடுத்ததால் விவசாயிகள் சிறந்த, கூடிய அறுடையைப் பெறமுடியாத நிலமையுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து, இம்முறை அறுவடைக்கட்டணத்தை, அறுவடை இயத்திர உரிமையாளர்கள் அதிகரித்துள்ளமையும், விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
கடந்தபோக அறுவடையின்போது ஒரு ஏக்கர் அறுவடைக்கு 7500 ரூபா வரையே கூலி வழங்கப்பட்ட போதிலும், இம்முறை சிறுபோக அறுவடைக்கு ஒரு ஏக்கருக்கு 18000 ரூபா வரை அறுவடை இயந்திரக் கூலி அறவிட உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நெல் விலையிலும் தற்சமயம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லை வெய்யிலில் உலர்த்தி சேமித்து வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகள் உட்பட உள்ளுர் வீதிகளிலும் அறுவடை நெல்லை பரப்பி உலர்த்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதுடன், இதனால் கூலித் தொழிலாளர்களுக்கும் நாளாந்த வருமானம் கிடைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)