அருகிப்போகும் மேட்டு நிலப்பயிர் விதைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள் பயிர் விதைகளின்றி பரிதவித்து வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கவலை தெரிவித்துள்ளார்.

விதைகளுக்கென உரிய முளைத்திறன்வரையும், காவல்காத்து பெறுவதற்கிடையில் காட்டு யானைகள் குறித்த மேட்டு நிலப்பயிர்களை அழித்து விடுவதால் உரிய விதைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இரா. துரைரெத்தினம் தமது அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இயற்கையாகவே விவசாயச் செய்கை ஊடாக மேட்டு நிலப்பயிர் செய்கையாளர்களிடமிருந்து பெற்று வந்த பயிர் விதைகள் குறிப்பிட்ட வருட காலமாக பெற முடியாது உள்ளது. பயிர்களை நட்டு அதிலிருந்து விதைகளை உரிய முளைத்திறன் வரையும் காவல் காத்து பெறுவதற்கிடையில் காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை அழிப்பதன் ஊடாக விதைகளை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக மேட்டு நிலப்பயிர் செய்கையாளர்கள் பயிரிடுவதற்கான விதைகள் இன்றி பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். நிரந்தரமாகவே பல பயிர் விதைகள் அழிந்து விட்டன. சில விதைகள் அழியும் தருவாயில் உள்ளன, ஒருசில விதைகள் மாத்திரம் வியாபாரிகளால் பாதுகாக்கப்பட்டு அதிகமான விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டி உள்ளது. இதுவும் ஒரு வகையான பொருளாதார அழிவுதான். இது எம்மிடமுள்ள வளத்தை அழிப்பதற்குச் சமனாகும். பல மடங்கு நிதிகளைக் கொடுத்து விதைகளை நடும் பட்சத்தில் அதைப் பாதுகாத்து அடுத்த வருடம் நடுவதற்கு அவ் விதைகள் முளைத்திறன் அற்றவையாக உள்ளன. இதுவும் திட்டமிட்ட செயற்பாடகவே கருத வேண்டி உள்ளது.

ஒரு வகையில் பயிர் விதைகளுக்கு நோய் தொற்றுகின்றன. பாமர விவசாயிகள் குறைந்த விலையில் விதைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நிதி உதவி இல்லாமல் உள்ளது . யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்குரிய திணைக்களங்கள், நிறுவனங்கள், மேட்டு நிலப்பயிர் செய்கையாளர்களுக்கு விதைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான செயற்திட்டங்களை அமுல்படுத்துகின்றனரா? அப்படியாயின் ஏன் சமூக மட்டத்தில் பயிரிடும் விதைகள் எல்லைப் புறங்களிலுள்ள கிராமங்களில் அற்றுப் போகின்றன. உதாரணமாக பெரிய சுரக்காய், பாம்புப்பயற்றை என்பனவற்றைக் குறிப்பிடலாம். மேலும், இருந்து இருபதுக்கு மேற்பட்ட விதைகள் இல்லாமலாக்கப்பட்டதோடு, மரவள்ளித்தடி, ஒரு வகையான வற்றாளைக் கொடி என்பன மாறுகின்றளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது ம் கவலைக்குரிய விடயமாகும்.

அருகிப்போகும் மேட்டு நிலப்பயிர் விதைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)