விசாரணை நடத்துமாறு கோருகிறது விவசாய அமைப்பு

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தின் பரிபாலனத்திற்குட்பட்ட நெற்காணிகளுக்கு சிறுபோகத்திற்காக வழங்கப்பட வேண்டிய யூரியா உரம் விநியோகிக்கப்படாமல் புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என சம்மாந்துறை தொய்யன் வட்டை கிழல்கண்ட விவசாய அமைப்பின் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் முக்தார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தின் பரிபாலன எல்லைக்குள் 24 விவசாய கண்டங்களை உள்ளடக்கிய சுமார் 10,500 ஏக்கர் நெற்காணிகள் இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

இக்காணிகளுக்கு விநியோகம் செய்வதற்கென யூரியா உரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்காக ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ நிறையுடைய உர மூடை ஒன்றுக்கு 10,000 ரூபா வீதம் ஆகக்கூடியது இரண்டு ஹெக்டேயருக்கு 20,000 ரூபா பணம் விவசாய அமைப்புக்கள் ஊடாக சம்மாந்துறை கமநல சேவை நிலையத்திற்கு குறித்த விவசாயிகளால் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை உரம் வழங்கப்படவில்லை.

தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்று முடிவடைந்து விட்டதால் இனி அந்த உரம் தேவைப்படாது என்பதைக் காரணம் காட்டி வேறு பிரதேச நெற்காணிகளுக்கு அது வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தில் கடந்த பல வருடங்களாக கமநல சேவை பெரும்பாக உத்தியோகத்தர் நிரந்தரமாக இல்லாமை காரணமாக நிந்தவூர் பிரதேச கமநல பெரும்பாக உத்தியோகத்தரே பதில் கடமையாற்றி வருகின்றார். இவ்வதிகாரி அம்பாறை மாவட்ட கமநல சேவை தலைமையக பெரும்பாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகிறார்.

இதன் பின்னணியிலேயே குறித்த நெற்காணிகளுக்கான உரம் வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது. ஆகையினால் இது குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மை வெளிப்படுத்தப்படுவதுடன் தவறிழைத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோரை மகஜர் மூலம் கோரியுள்ளோம் என்றார்.

விசாரணை நடத்துமாறு கோருகிறது விவசாய அமைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)