
posted 4th August 2022
இலங்கை அரசியலில் சர்வகட்சி அரசின் அவசியம் தொடர்பில் முக்கிய கவனம் திரும்பியுள்ள நிலையில் முக்கிய முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதில் முஸ்லிம் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தற்போதய அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டுமானால் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் முன்னெடுக்கும் சர்வகட்சி அரசு அமைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்கனவே சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடிதம் மூலம் கோரியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி கடந்த புதன் கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து கொள்கை விளக்க உரையாற்றுகையில் மீண்டும் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கோரியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன், நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சர்வகட்சி அரசங்கம் மிகவும் அவசியமாகுமென கருத்து வெளியிட்டுள்ளதுடன், இந்த செயற்பாட்டுக்கு தமது முழுயான ஒத்துழைப்பை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலையும் நட்டதியுள்ளார். இந்நிலையிலேயே சர்வகட்சி அரசியல் இணைவது தொடர்பில் பிரதான முஸ்லிம் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவதில் முஸ்லிம்கள் ஆர்வம் காட்சிவரும் அதேவேளை, இதுவிடயமாக விமர்சனப் பார்வைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.
இருப்பினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில், ஜனாதிபதியின் சர்வகட்சி அரசு தொடர்பான அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதய நெருக்கடியான சூழலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளதாக செயலாளர் சுபைர்தீன் இந்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் சாதகமான பதிலை வழங்குமென அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகத்தின் நலன் சார்ந்த எத்தகைய நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகளை முன்வைத்து சர்வகட்சி அரசுடன் இவர்கள் இணையப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்படுவதுடன், பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கோளாகாகக் கொண்ட ஆதரவா எனவும் விமர்சனப் பார்வைகள் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன.
சர்வகட்சி அரசியல் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)