முறைப்பாடுகளுக்கென விசேட கருமபீடம்

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நிலையத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது நேரடியாக வருகைதந்து வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.

திண்மக் கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, வடிகான் பராமரிப்பு உட்பட மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் பொது மக்கள் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,பொது மக்கள் சிரமமின்றி இலகுவாகவும், விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கரும பீடத்தை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முறைப்பாடுகளுக்கென விசேட கருமபீடம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)