
posted 31st August 2022
வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இளைஞர்கள் போராடி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சியை மாற்றி, ஜனாதிபதியை மாற்றி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகிந்த ஆட்சியினுடைய நிழல்.
ஆட்சியை செய்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்வி காணப்படுகின்றது.
ஜனநாயகம் தொடர்பாக பேசப்படும் போது போராட்டக்காரர்களை கைது செய்தல் செயற்பாடும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று சொன்னார்கள். ஆனால், அவ்வாறு இடம் பெறவில்லை. மக்கள் மீண்டும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து குறிப்பாக மீனவர்களை பாதிக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஊடகம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக மீனவ சமூகங்களின் கோரிக்கைகளை முன் வைப்பதற்காக கலந்துரையாடி இருக்கின்றோம்.
கடந்த 30 வருட காலமாக யுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதே சுவடுகளையும் துன்பங்களையும், சுமந்தவர்களாக தொடர்ச்சியாக வடக்கு மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, இந்திய இழுவைமடி பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே, வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)