மருதமடு அன்னையின் ஆலயத்தின் புனிதத்துவத்தை தொடர்ந்து பேணி பாதுகாக்க  வேண்டும் - ஆயர்

மடு திருத்தலத்துக்கு வருவோர் செபிக்கும் நோக்குடன் வருகை தந்து செபிப்பதன் மூலமாகவும் பயபக்தியுடன் வழிபாடுகளில் கலந்து கொள்வதனாலும் மருதமடு அன்னையின் இந்த ஆலயத்தின் புனிதத்துவத்தை தொடர்ந்து பேணி பாதுகாக்க ஏதுவாகும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ அண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் மடுத் திருப்பதியில் செவ்வாய் கிழமை (09) நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

இன்று செவ்வாய் கிழமை (09.08.2022) மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் மடுத் திருப்பதியில் எதிர்வரும் ஆவணி மாதத்துக்கான மருதமடு அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு கூட்டம் இங்கு இடம்பெற்றது.

இங்கு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நாங்கள் மக்களுக்கு தெரிவிப்பதாவது

-தற்பொழுது இவ் விழாவை முன்னிட்டு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இவ் விழாவுக்காக வந்துள்ளனர். இங்கு அமைக்க்பட்டிருக்கும் வீடுகள் யாவும் பக்தர்கள் தங்குவதற்காக தன்னகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பல நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைத்து பலர் இங்கு தங்கியுள்ளனர் இவற்றுடன் மேலும் பெருந் தொகையான பக்தர்கள் வருகை தருவதற்கு இருப்தாக தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் 11 ந் திகதி போயா தினமாக இருப்பதாலும் 14 ந் திகதி ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதாலும் பலர் இங்கு வர இருப்பதாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் இவ்வாறான ஒரு இடத்தில் மக்கள் ஒன்றுகூடும்போது நாங்கள் அவர்களின் ஆரோக்கியத்தையும் அவசியம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

இக்கூட்டத்தில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தது போன்று இவ் சூழலில் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும்.

இவ் முகக்கவசம் அணிவதன் மூலம் எம்மையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாக்க ஏதுவாகும்.

அத்துடன் நாம் மடுத்திருப்திக்கு வருவது செபிக்கவும் நாம் கலந்து கொள்ளும் வழிபாட்டில் பக்தியுடன் ஈடுபடுவதால் இவ் திருத்தலத்தில் ஒரு புனிததத்துவம் ஏற்படுகின்றது.

பல பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் மக்கள் தங்கள் இல்லங்களிலிலேயே இருந்து கொண்டு இவ் ஆவணி திருவிழாத் திருப்பலியை ஆவணி 15 ந் திகதி காலை 6.15 மணியிலிருந்து நேரலையாக 'தெரண' தொலைக்காட்சியில் பார்த்து இவ் விழாவுடன் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மருதமடு அன்னையின் ஆலயத்தின் புனிதத்துவத்தை தொடர்ந்து பேணி பாதுகாக்க  வேண்டும் - ஆயர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)