
posted 12th August 2022
மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த வருடத்தில் மொத்தமாக 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த வருடத்தில் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக கொரோனா தொற்றால் 40 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். எனவே பொதுமக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜா வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.
பணிப்பாளர் தர்மராஜா வினோதன் வெள்ளிக்கிழமை (12.08.2022) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;
இந்த மாதத்தில் (ஓகஸ்ட்) முதல் 11 நாட்களிலும் மொத்தமாக 103 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
தற்போது அடையாளம் காணப்பட்டு இருக்கின்ற இந்த கோவிட் தொற்றானது சாதாரண தடிமன், தலை பாரம், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகின்றது.
இந்த தொற்றினால் அநேகம் பேர் வீட்டில் இருந்தவாறு சுய சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் எம்மால் கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையை விட மிகவும் குறைவான எண்ணிக்கையாக காணப்படுகிறது.
அதாவது 103 நோயாளர்கள் எம்மால் அடையாளம் கண்டறியப்பட்டிருந்தால் அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்கான நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் சுய சிகிச்சை செய்து கொண்டு வீடுகளில் தங்கி இருக்கலாம்.
இந்த நோயாளர்கள் சாதாரண நிலைமையில் காணப்பட்டாலும் கூட சமூகத்தில் அதிக அளவு இந்த வைரஸ் குறுகிய காலத்தில் பரவும் போது திரிபடையக் கூடிய சாத்திய கூறு கானப்படுகின்றது
அவ்வாறு வைரஸ் திரிபடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் பரவினால் அதனுடைய தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புக்களும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
எனவே பொதுமக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக பொதுமக்களின் பிரயாணங்களை கட்டிப்படுத்த முடியாத சூழ்நிலை அமைந்துள்ளது.
எனவே பொதுமக்கள் இவ்வாறான காலங்களில் கட்டாயமாக முக கவசங்களை பொது இடங்களிலும், போக்குவரத்திலும் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்
அத்தோடு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்த்து சமூக இடைவெளியை பேணிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 20 வயதுக்கு மேற்பட்ட 64 சதவீதமானவர்கள் முதலாவது மேலதிக வலுவூட்டல் (booster) தடுப்பூசியை அல்லது மூன்றாவது ஃபைசர் தடுப்பூசியை பெற்றிருக்கின்றார்கள்.
இது வட மாகாணத்தில் மிகவும் அதிக அளவில் பெறப்பட்ட தடுப்பூசி ஆகும்.
இதில் மூன்றாவது அல்லது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியினை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்பட்டவர்கள், மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விரும்பியவர்கள் தமது நான்காவது தடுப்பூசி அல்லது இரண்டாவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இவர்களும் சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை நாடி தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம்.
இலங்கையிலேயே மிகவும் குறைவான கொரோனா நோயாளர்கள் காணப்பட்டு குறைவான மரணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது மன்னார் மாவட்டமே
இது உண்மையில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களத்தின் நடவடிக்கைகள் மாத்திரம் இன்றி கடந்த காலங்களில் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பினாலயுமே இவை சாத்தியமானது.
இதேபோன்ற ஒத்துழைப்பைத்தான் நாங்கள் இந்த கடினமான சந்தர்ப்பத்திலும் மக்களிடம் மீண்டும் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது மடுமாதா திருத்தலத்தின் உற்சவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இத் திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் மன்னார் மற்றும் வேறு இடங்களில் இருந்தும் வருகை தர உள்ளார்கள்.
ஆகவே இந்த திருவிழாவுக்கு வருகை தரும் மக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார வழிமுறைகளையும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு.
இத் தொற்று நோய் காரணமாக இவ்வாறான திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் இயலுமை எனக்கு தற்பொழுது இல்லை.
ஆகவே கலந்து கொள்ளும் மக்களே தமது பொறுப்புக்களை உணர்ந்து, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து, தாமும் தம்மைச் சார்ந்தவர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)