
posted 2nd August 2022
நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று நோய் பரவுவதில் மன்னாரும் உள்ளாகியுள்ளதுடன் தற்பொழுது மன்னாரில் ஆரம்பமாக இருக்கின்ற ஆவணி மாத மடு அன்னை பெருவிழாவுக்கு வரும் யாத்திரிகர்கள் வழிபாடுகளின் போது கட்டாயம் கொவிட் கட்டுப்பாடு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் அணிந்தவர்களாக இருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் இவ்வாறு தெரிவித்தார்.
திங்கள் கிழமை (01.08.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற ஆவணி மாதம் நடைபெற இருக்கும் மருதமடு அன்னையின் பெருவிழா தொடர்பான முன்னேற்பாடு கலந்துரையாடல் கூட்டத்தின்போது மடுவில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார விடயமாக வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் கருத்து தெரிவிக்கையில்;
நாட்டில் கொவிட் - 19 தொற்றின் அலை மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்கம் தற்பொழுது மன்னாரிலும் எற்பட்டுள்ளது.
ஆகவே, இந்த நேரத்தில் இந்தத் தொற்று நோய் பரவாதிருக்க இது தொடர்பான கட்டுப்பாட்டை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு மன்னாருக்கும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்தக் கொவிட் தொற்றானது தற்பொழுது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றது.
சென்ற மாதம், அதாவது யூலை மாதம், மட்டும் 61 நோயாளர்களும், இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்திலே 9 கொவிட் தொற்று நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டுமல்ல, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவான மடு , முசலி மற்றும் மன்னார் ஆகிய அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாலும், இலங்கையில் ஏனைய மாவட்டங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவதாலும், மன்னாரில் யாத்திர்களின் தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் பெருவிழாவில் பங்குகொள்ள வருகை தரவுள்ள யாத்திரிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த கொவிட் தொற்று பரவாதிருக்க இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உண்டு என கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், ஆலய வளாகத்துக்குள் நடமாடும் அனைவரும், மத வழிபாடுகளின் போதும், கட்டாயம் யாவரும் முகக்கவசம் அணித்திருக்க வேண்டும் என வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)