
posted 11th August 2022
கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸ் ஆகியவற்றுக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்த சந்தையில் மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் நேற்றுப் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயினும் சந்தை வியாபாரிகளைவிட வெளியே உள்ள பலசரக்குக் கடைகளில் மரக்கறி வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிட்டனர்.
சந்தை வியாபாரிகள் தெரிவிக்கையில்;
சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதால் சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியை கொள்வனவு செய்யாமல் வீதியோரமாக இருக்கும் கடைகளில் அவற்றைக் கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர்.
அதனால் சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
அத்துடன் வீதியோரக் கடைகளில் மரக்கறி கொள்வனவுக்காக வருவோர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.
எமது சந்தை சுற்று வட்டாரத்தில் உள்ள யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளுகைக்குள் உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரத்தை தடை செய்யக் கோரி இரு சபைகளிடமும் மகஜர் கையளித்துள்ளோம் என்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)