
posted 1st September 2022
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் அம்பாறை மாவட்டத்தில், இரு பாடசாலைக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமா லெவ்வையின் முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி பாடசாலையின் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், காரைதீவு இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையின் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் என்பன ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன், நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைகள் கையளிக்கப்பட்டதுடன், ஆளுனரின் நிதியொதுக்கீட்டின் கீழ் பாடசாலை தளபாடங்களும் இந்நிகழ்வின் போது ஆளுனரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமா லெவ்வை, காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம், நிந்தவூர் கோட்ட கல்வி அதிகாரி எம். சரிப்டீன், நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி. ஹாமிது, காரைதீவு ஆர்.கே.எம். பாடசாலையின் அதிபர் ஆர். ரகுபதி, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். நாசிறூன், கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர்கள், கணக்காளர் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)