பவினா மோகனராஜ் அகில இலங்கை ரீதியில் வரலாற்றில் HNDE பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்ற மட்டக்களப்பு  மாணவி!

இலங்கை உயர் தொழில் நுட்பவியல் தேசிய டிப்ளோமா மாதிரிகளுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2022.08.12 திகதி தொடக்கம் 2022.08.14 திகதி வரை நடைபெற்றது.

இதன்போது கடந்த 2022.08.12 திகதி அன்று இடம்பெற்ற நிகழ்வில் டிப்ளோமா கற்றை நெறிக்கான பட்டமளிப்பு நிகழ்வில் கிழக்கு மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்லூரி புதிய சாதனை ஒன்றினை புரிந்துள்ளது.

இலங்கை உயர் தேசிய டிப்ளோமா வரலாற்றில் HNDE பிரிவில் முதலாவது சாதனையாக முதல் தங்கப் பதக்கத்தினை மட்டக்களப்பு கல்லூரியினை சேர்ந்த மாணவி பவினா மோகனராஜ் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவே அகில இலங்கை ரீதியில் குறித்த கற்கை நிறுவனத்தினால் வழங்கப்படும் முதல் தங்கப்பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம் மாணவியின் இச் சாதனை அம் மாணவிக்கும், கல்லூரிக்கும் மாத்திரமன்றி மட்டக்களப்பு பிரதேசத்திற்கும் பெருமையினையும், கௌரவத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதன் போது மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்லுரியில் இருந்து மாத்திரம் Higher National Diploma in - Information Technology - HNDIT, Accountancy - HNDA, English - HNDE, Tourism and Hospitality Management - HNDTHM ஆகிய கற்கை நெறிகளினை வெற்றிகரமாக நிறைவு செய்த சுமார் 400 மாணவர்கள் இவ்வருடம் பட்டம் பெற்றுளதுடன் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி முன்னிலை வகித்துள்ளது.

மட்டக்களப்பு உயர் தேசிய டிப்ளோமா கற்கை நிறுவகமானது 1992ல் ஆரம்பிக்கப்பட்டு, 2015ல் தரமுயர்த்தப்பட்டு, ஆரையம்பது கோவில்குளம் பகுதியில் மிகவும் சிறப்பான முறையில் கல்லூரி முதல்வர் செல்வரெத்தினம் ஜெயபாலனால் கட்டமைக்கப்பட்டு, வழிகாட்டுதல்களுடன் இன்றுவரை பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாக வித்திட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பவினா மோகனராஜ் அகில இலங்கை ரீதியில் வரலாற்றில் HNDE பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்ற மட்டக்களப்பு  மாணவி!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)