பலவகைச் செய்தித் துணுக்குகள்

வெளி மாவட்டத்து கொள்ளைக்காரன் கைது

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் ஆலயத்துக்குள் கடமையிலிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்தபோதே குறித்த நபர் இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்தனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

அதிபரை நியமிக்கப் போராட்டம்

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை புதன்கிழமை (24) மேற்கொண்டனர்.

கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை.
கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை.

இதேவேளை, பிரதி அதிபரும் ஒய்வு நிலையை அடைந்துள்ள நிலையில், மேலதிக சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

42 ஆசிரியர்களையும், 800 மாணவர்களையும் கொண்ட குறித்த தேசிய பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நிரந்தரமாக அதிபர் ஒருவரை நியமித்து தருமாறும், கல்விசார் விடயங்களை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை விரைந்து எடுக்குமாறும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இலங்கை வங்கி ஊழியரின் விசித்திர கவனவீர்ப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் புதன் (24) யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட விசித்திர கவனவீர்ப்பு ஒன்றை நடத்தினர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக மதியம் 1.20க்கு ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம் 1.21க்கு கலைந்து சென்றனர்.

இலங்கை வங்கித் தலைவர் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றார்.

  • சட்டம் எங்கே?
  • பொதுமக்கள் பணத்தை பாதுகாக்குக
  • இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்துக
  • இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைக்காக தடயவியல் கணக்காய்வு ஒன்றை ஆரம்பிக்குக

போன்ற வாசகங்கள் பதாகைகளை வங்கி ஊழியர்கள் தாங்கியிருந்தனர்.



அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர்களின் தடுப்புக்கு கண்டனம் ! உடன் விடுதலை செய்! - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தல்!

"முட்டாள்கள் பாறாங் கல்லைத் தூக்குவது முடிவில் தமது கால்களில் போடுவதற்கே" எனும் முதுமொழி போன்றே குறுக்கு வழிவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பாறாங்கல்லை மக்களுக்கு எதிராகத் தூக்கி நிற்கிறார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர்களான ஹஷந்த ஜீவந்த குணத்திலக, கல்வெள சிறி தம்மானந்த தேரர் ஆகிய மூவரையும் தொண்ணூறு நாட்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இச் செயல் நாட்டையும், மக்களையும் மேலும் கொடிய அடக்கு முறைக்குள் கொண்டு செல்லும் மோசமான செயற்பாடாகும். இவ் அடக்கு முறையை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயற்பாட்டாளர்கள் மூவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தலைவிரித்தாடித் தனது கோரத்தனத்தைக் காட்டிவந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் மலையக இளைஞர்களையும், முஸ்லிம்களையும் விட்டு வைக்கவில்லை.

அத்தகைய பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களை வேட்டையாடக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இப் ஃபாசிசச் சட்டத்தைத் தனது வழமையான மேற்குலக எசமான நாடுகளினதும், அவர்களது முகவர்களது வற்புறுத்தல்களையும் புறந்தள்ளித் தனக்குப் பதவிப் பிச்சை வழங்கிய ராஜபக்ச குடும்பத்தின் விருப்பத்தை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றி இருக்கிறார்.

1979ம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களைப் போன்றே இப்போது 'அரகலயப்' போராட்டத்தை முன்னனெடுத்த சிங்கள இளைஞர்களையும் மக்களையும் ஒடுக்கும் கைங்கரியம் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாட்டையும், பொருளாதாரத்தையும், மக்களையும் நாசப்படுத்திய ஊழல் மோசடிமிக்க ஆளும் வர்க்க சக்திகள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கும், அநீதிகள் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் முன் நின்ற மக்கள் சார்பு சக்திகளை வேட்டையாடவே ரணில் விக்கிரமசிங்க ஒப்பமிட்டு அனுமதி வழங்கி இருக்கிறார்.

இத்தகைய தேச விரோத, மக்கள் விரோதச் ஒடுக்குமுறைச் செயலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டித்து எதிர்க்கின்றது.

இப்பொழுது மட்டுமன்றி இச் சட்டம் கொண்டு வரப்பட்ட 1979ம் ஆண்டிலிந்தே எமது கட்சி தொடர்ச்சியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து அதனை அகற்றக் கோரிப் போராடியும் வந்திருக்கிறது.

ஆதலால் இப் ஃபாசிசச் சட்டம் இல்லாதொழிக்கப்படுவதை அனைத்து மக்களோடும், கட்சிகளோடும், அமைப்புகளோடும் இணைந்து நின்று எமது கட்சி உரத்துக் குரல் கொடுக்கிறது. அதே போன்று இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் இதுவரை விடுவிக்கப்படாத அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்து கிறது எனப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY