
posted 25th August 2022
கட்டுப்பாட்டு விலையில் முட்டைகள் - தாண்டுபவருக்குத் தண்டம்
யாழ்ப்பாணத்தில் கூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
முட்டைக்கான நிர்ணய விலையினை பாவனையாளர்கள் அதிகார சபை விசசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ளது.
வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் , அதி கூடிய விலைக்கு முட்டையினை விற்பனை செய்தல், விலைப்பட்டிகளை காட்சிப்படுத்தாமை, போன்றவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது இது தொடர்பில் யாழ் மாவட்ட வர்த்தகர்களுக்கு, பாவனையாளர்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார்.
23.08.2022
கூடிய விலையில் முட்டை விற்பனை - அதிகாரிகளின் அதிரடி வேட்டை
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும், பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முட்டைகளின் விலைகளைக் கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கல்வியங்காடு போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது, அதிக விலைக்கு கோழி முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வர்த்தக நிலையங்களில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.
பகிடிவதைக்குப் தண்டனை வகுப்புத் தடை
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்குப் பகிடிவதைக் குற்றச்சாட்டுக் காரணமாக மறு அறிவித்தல் வரையில் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் ஒருவரைப் பல்கலைக்கழக வாயிலில் வைத்துக் கடந்த 2ஆம் திகதி இவர்கள் தாக்கினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இருவருக்கும் மறு அறிவித்தல் வரையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும், விடுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முறையால் இடத்தைப் பிடித்த இராமச்சந்திரன் சுரேன்
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவராகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேனுக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த நால்வர், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் வாக்களித்தனர்.
இவருடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ உறுப்பினர் க.சதீஸுக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 6 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவருமாக 8 பேர் வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை.
அந்நிலையில், நகர சபைக்கான தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இருவரும் தலா 8 வாக்குகளைப் பெற்று சமநிலையாக இருந்தமையால் குலுக்கல் முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இரா. சுரேன் புதிய தலைவராகத் தெரிவாகினார்
தற்கொலை செய்த கடற்படைச் சிப்பாய்
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா(வயது-23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிப்பாய் இன்று காலை தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தவிர்கப்பட்ட காணி சுவீகரிப்பு
முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை முகாமுக்காக மக்களின் காணிகளை அளவிடும் பணிகள் பொது மக்களின் எதிர்ப்பால் நேற்று முன்தினம் (23) கைவிடப்பட்டது. இதனால், நில அளவீட்டுக்காக சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றை கடற்படையினர் அமைத்துள்ளனர்.
இந்த காணிகளை கடந்த சில வருடங்களாக படை முகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களம் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தன.
அத்துடன், காணி எடுத்தல் சட்டம் 05 ஆம் பிரிவின் (1) ஆம் சரத்திற்கு அமைய காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியான வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்ரெயர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.
காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகை தந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் 15 காணி உரிமையாளர்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொண்டு காணிகளை கடற்படைக்கு வழங்க இணக்கம் தெரிவித்து அளவீடுக்கு சென்றிருந்தனர்.
எனினும், ஒரு தொகுதி மக்கள் தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் ஆகியோரும் ஈடுபட்டனர்.
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களை அழைத்து பொதுவான ஒரு கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமும் காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இதன் பின்னணியில் அளவீட்டு பணிகளை நிறுத்தி நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த இடத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் பிரசன்னமாக்கிருந்தனர். அத்துடன், அதிகளவிலான புலனாய்வாளர்கள், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)