பலவகைச் செய்தித் துணுக்குகள்

வர்த்தகரிடம் விதிக்கப்பட்ட தண்டம்

யாழ்ப்பாணத்தில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதன்போதே பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர்.



காணித் தகராரினால் வந்த விளைவுகள்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை (04) மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணித் தகராறு காரணமாக 46 வயதான மாமியார் மற்றும் 14 வயதான மைத்துனர் ஆகியோரை குறித்த சந்தேக நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மாமியார் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



நீச்சல் தடாகத்தில் இளைஞரின் சடலம்

முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் பணியாற்றிவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரைக் காணவில்லை என்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவுப் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள்கூட எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எங்கள் போராட்டம் 13 வருடங்களையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் நீதி கிடைக்கவில்லையென்பதால் இன்று தனித்துவமாக போராட்டத்தை 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தொடங்கி 5 ஆண்டுகளை கடந்துள்ளன.

6ஆவது வருடத்திலும் போராடிக்கொண்டிருக்கும் எமக்கு இலங்கை அரசாங்கமும் எந்தவொரு நீதியையும் தரவில்லை. இந்த நிலையில் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றும் அங்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம். அதேவேளை, எமது போராட்டம் தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2000 ஆம் நாட்களை அடைகின்றது. அன்றைய தினம் மாபெரும் போராட்டமாக முன்னெடுக்க அனைத்து தரப்பினரையும் அழைத்து போராட இருக்கின்றோம்.

அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும். வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரப்பிக்கப்படும் பேரணி டிப்போ சந்தியில் நிறைவடையும். இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எமது உறவுகள் கிடைக்கும்வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் அதில் கலந்து கொள்ளுமாறு மக்களை அழைக்கின்றோம் என்றார்.



அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்தது

இலங்கையில் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்ததைத் தொடர்ந்து, உணவுப் பொதி மற்றும் தேநீர் விலையை குறைப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த நாட்களை விடவும் பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி, பழங்கள் மற்றும் மீன்களின் விலைகள் நேற்று அதிகரித்துக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கான எரிபொருள் கொள்வனவில் உள்ள சிரமங்கள் காரணமாகவும், மழையுடனான வானிலை காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்ததாக இளைஞர்கள் கைது

முல்லைத்தீவில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இளைஞர்களில் ஒருவர் கள்ளப்பாடு தெற்கைச் சேர்ந்த 22 வயதுடையவர் என்பதோடு, மற்றைய நபர் உண்ணாப்பிலவைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY