நிந்தவூரில் கடலரிப்பு உக்கிரம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர்ப் பிரதேசத்தில் திடீரென கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.

இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரையை அண்டிய சில மீனவர் கட்டிடங்களும் பெரும் சேதத்திற்கும் உள்ளாகியுள்ளன.
தற்சமயம் திடீரென உக்கிரமடைந்துள்ள கடலரிப்பு நிந்தவூர் 9 ஆம் பிரிவு பகுதியில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள அதே வேளை, கரைவலை மற்றும் ஆழ் கடல் மீன்பிடியாளர்களின் தோணிகள், இயந்திரப்படகுகளை நிறுத்தி வைப்பதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலுவில் மீன்பிடித்துறைமுக நிர்மாணம் காரணமாக கடந்த பல வருட காலமாக அயல் பிரதேசமான நிந்தவூர்ப் பகுதியில் கடலரிப்பு தொடர்ந்தவண்ணமுள்ளதுடன், கடலை அண்மித்த வயல் நிலங்கள் தென்னந் தோப்பு என்பனவும் பாதிப்படையும் நிலமையும், கடலால் காவு கொள்ளப்படும் பாதிப்பும் தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலமை தொடர்பில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். பைஸால் காசிம், கரையோர பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், சில கடலரிப்புக்குள்ளான பகுதிகளில் கருங்கற்கள் இடப்பட்டு கடலரிப்பு தடுக்கப்பட்டது.

எனினும், தற்பொழுது ஏனைய சில பகுதிகளே உக்கிர கடலரிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த விடயம் பாராளுமன்ற உறுப்பினர் எம். பைஸால் காசிமின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து அவர் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஆவண செய்துள்ளார்.

இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல்லதீப், அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம். றாசிக், கரையோர பாதுகாப்பு திணைக்கள மாவட்ட திட்டமிட்ல் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஜெசூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், எம்.ரி.எம். சரீப், நிதி உதவியாளர் எம்.வை.எம். நஜீப் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாஹிரா ஆகியோரடங்கிய குழுவினர் தற்சமயம் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு பகுதிகளையும், ஏற்பட்டுள்ள சேத நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கும் உரிய அறிக்கைகளை அனுப்பியும் வைத்துள்ளனர்.

இதேவேளை, தற்போதய கடலரிப்பு உக்கிரமடைந்துள்ள பிரதேசங்களில் முதற் கட்டமாக தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நிந்தவூரில் கடலரிப்பு உக்கிரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)