தலைமன்னார் கடற்பரப்புக்கள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் 12.09.2022 வரை விளக்கமறியல்

தலைமன்னார் பாக்கு நீர் கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் எதிர்வரும் 12.09.2022 வரை விளக்க மறியலில் வைக்கும்படி மன்னார் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

மன்னார் பாக்கு நீர் கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு இந்திய இழுவை படகில் வந்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை (27.08.2022) இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் ஞாயிற்றுக் கிழமை (28.08.2022) தலைமன்னார் கடற்படையினரால் மன்னார் கடத்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமுகமாக மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரி ஏ ஜெயசீலன் இவ்வாறு மீனவர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை (29.08.2022) முன்னிலைப்படுத்தினார்.

இவர்களை எதிர்வரும் 12.09.2022 வரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சூசை நிசாத் (வயது 35 ), பாம்பன் புயல் காப்பகம் சேர்ந்த சூசை வியாகுலம் (வயது 31), ராமேஸ்வரம் தேர்ந்த வேலுச்சாமி கருணாநிதி (வயது 48, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த அழகு சாமி உலகநாதன் (வயது 40), இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்தியாண்டி (வயது 57), தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரியதாஸ் யட்னி (வயது 41) ஆவர்.

இவர்களின் நலன்நோக்க யாழ் இந்திய துணை ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து அதிகாரி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் கடற்பரப்புக்கள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் 12.09.2022 வரை விளக்கமறியல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)