சுயபற்று மேலோங்க அர்ப்பணிப்பு அருகிப்போகும் - கலாநிதி த.மங்களேஸ்வரன்

அலுவலகர்கள் பலர் தங்களில் அதிகம் சுயபற்று கொள்வதால் சமூதாயத்துக்கும் நிறுவனங்களுக்கும் இவர்களுடைய அர்ப்பணிப்பு அற்று போகின்றது - துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன்

நாம் இப்பொழுது தமிழ் பண்பாடு கலாச்சரங்களை மறந்து இப்பொழுது கையடக்க தொலைபேசியில் மூழ்கி விட்டோம். மாணவர்கள் இளைஞர்கள் திருக்குறளின் மகிமையை, அதன் தத்துவங்களை அறிந்து வாழ்க்கையில் இணைத்துக் கொண்டால் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும்.

இன்றைய காலத்தில் பலர் தங்களிலேயே பற்றாக இருக்கின்றனர். ஆனால் தாங்கள் வேலை செய்யும் நிவனங்களிலோ, இடங்களிலோ பற்றற்றில்லாது இருக்கின்றனர். சமூதாயத்துக்கு, நிறுவனங்களுக்கு இவர்களுடைய அர்ப்பணிப்பு இல்லாமையால் பல நிறுவனங்கள் சவாலுக்கு உள்ளாகியுள்ளது என வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா செவ்வாய்க்கிழமை (16.08.2022) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்;

நவீன தொழில் நுட்பம் காரணமோ அல்லது அவர்களின் வீட்டுப் பழக்கமோ தெரியவில்லை. வீட்டில் பெற்றோர் சொல்வதற்கு பிள்ளைகள் செவி சாய்ப்பதில்லை. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் பிழையான வழியில் வாழத் துடிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

திருவள்ளுவரால் உருவாக்கப்பட்ட திருக்குறள் உலகலாவிய ரீதியில் போற்றப்பட்டதொன்றாகும்.

இனம் மதத்தையும் தாண்டி திருக்குறள் ஒரு பொது நூலாக அமைந்துள்ளது. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந் நூலானது ஐ.யு.போப் அவர்களால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

இன்றைய காலத்தில் தமிழ் பேசும் நாம் இந் நூலை பயன்படுத்துவது மிகக் குறைவாகவே இருக்கின்றது.

மேற்குலகத்தவர்கள் ஆங்கில மொழியிலுள்ள திருக்குறளைப் பின்பற்றி வருகின்றபொழுது, நாம், மின்னணுவியலின் ஆதிக்கம் கூடியதனாலும், அதில் எமது மொத்தக் கவனமும் இருப்பதனாலும் நமது தமிழ் பண்பாடு, கலாச்சரங்கள் நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டிருப்பதை நம் சமுதாயத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

நான் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிக்கடி கூறுவது, தற்பொழுது நண்பர்கள் சிமாட் தொலைபேசியாகவே மாறி விட்டனர் என்று.

நாம் சிறிது நேரம் ஒதுக்கி, திருக்குறளின் உட்கருத்துக்களை கூர்ந்து பார்த்தோமாகில், குறள்கள் நமது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் இவ்விரண்டு வரிகளிலிலும் உள்ளடக்கி அருமையான அர்த்தத்தை நமக்கு விளக்கிவதை உணரமுடியும்.

ஈரடி குறலால் உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பொருத்தமானவகையில் சிறந்த கருத்துக்களை கூறும் வகையில் பொது மறையாக அமைந்துள்ளதால் திருவள்ளுவருக்கு ஒரு தனி இடம் உண்டு.

இதனூடாக தமிழை பெருமை அடையச் செய்தவர் திருவள்ளுவர். ஆகவே இதை முன்னிட்டு இவ்வாறான விழா இவருக்கு எடுப்பது சிறப்பே.

மாணவர்கள், இளைஞர்கள் திருக்குறளின் மகிமையை, இதன் தத்துவங்களை அறிந்து வாழ்க்கையில் இணைத்துக் கொண்டால் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும்.

திருவள்ளுவரின் குறளையும், எனது வாழ்க்கையையும் நான் சில சமயங்களில் ஒப்பிட்டு பார்ப்பது உண்டு. சிறுவர்கள் திருக்குறளை படிப்பது அவர்களுக்கு சில சமயம் கடினமானதாக இருக்கலாம்.

ஆனால் சிறுவர்கள், பெரியோர், ஆசிரியர்கள், சமூகத்தில் உள்ளவர்கள் சொல்லுகின்ற நல்ல விடயங்களை கேட்டு அவற்றை ஒழுகுவதன் ஊடாக சமூகத்துக்கும் நாட்டுக்கும் சிறந்தவர்களாக விளங்குவர்.

திருக்குறளில் முதலில் பெற்றோரை சிறப்பித்திருக்கின்றார். ஆனால் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை.

தாய், தந்தை, குரு கண்கண்ட தெய்வம் என்று நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். எங்கள் காலத்தில் நாங்கள் இவற்றை கடைபிடித்து வருகின்றோம். ஆனால், இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை.

நவீன தொழில் நுட்பம் காரணமோ அல்லது அவர்களின் வீட்டுப் பழக்கமோ தெரியவில்லை. வீட்டில் பெற்றோர் சொல்வதற்கு பிள்ளைகள் செவி சாய்ப்பதில்லை. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் பிழையான வழியில் வாழத் துடிக்கின்றனர்.

தமிழ் தற்பொழுது அழிந்து போகின்றது. ஆனால் புலம்பெயர்ந்து போனவர்கள் பலர் தமிழை பின்பற்றி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

கனடாவுக்கு நான் சென்றிருந்தபொழுது அங்கு தமிழுக்கு பெருவிழா எடுத்தனர். அனால் எமது பிரதேசத்தில் நாம் கைவிட்டு செல்லுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

திருவள்ளுவரின் குறிக்கோள் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே அவர் திருக்குறளை எழுதியுள்ளார்.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் என திருவள்ளுவர் எழுதியிருக்கின்றார். இப்பொழுது இந்த அறத்துப்பாலை வாழ்க்கையில் கடைபிடிக்காது செல்லும் சமூகமாக மாறிவிட்டது.

திருக்குறல் வாழ்வுக்கு உகந்தது என்பதால்தான் நாம் இதை இன்று சிந்திக்கின்றோம்.

இன்றைய காலத்தில் பலர் தங்களிலேயே பற்றாக இருக்கின்றனர், ஆனால் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிலோ, இடங்களிலோ பற்றற்று இல்லாது இருக்கின்றனர்.

சமூதாயத்துக்கு நிறுவனங்களுக்கு இவர்களுடைய அர்ப்பணிப்பு இல்லாமையால் பல நிறுவனங்கள் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்றைய காலத்தில் நன்மை செய்வதைவிட தீமை செய்வதிலேயே பலர் விழிப்பாக இருக்கின்றனர்.

இதனால் தான் திருவள்ளுவர் எமக்காக வாழ்வியல் குறளைத் தந்து சென்றுள்ளார் என்று எடுத்துரைத்தார்.

சுயபற்று மேலோங்க அர்ப்பணிப்பு அருகிப்போகும் - கலாநிதி த.மங்களேஸ்வரன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)