
posted 26th August 2022
தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசினார் சாணக்கியன்!
உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்பின் 65 - ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது.
500இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பல்வேறு நாடுகளின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து பேசியிருந்தார்.
குறிப்பாக தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகர் எல்.ஏ அப்பாவினை இரா. சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.
தமிழ் நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தமிழக அரசாங்கம் வழங்கி வரும் உதவித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டொக்டர் ஜி. குணராஜுடனும் சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.
மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட சாணக்கியன், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களுடைய பங்களிப்பினையும், தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பினையும் எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, உலக நாடுகள் முழுவதிலும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் அரசியல் உரிமைகளை பெற்றுகொள்வதற்கு எவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பது என்பது குறித்து பேசியிருந்தேன்.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை வகுப்பது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்” எனக் குறிப்பிட்டார்.
கொமன்வெல்த் அமைப்பின் 65 - ஆவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, சி.பி. ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி கவிரத்ன, இரா. சாணக்கியன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY