
posted 9th August 2022
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளின் பங்கு, பங்கேற்பு ஆகியனவும் சர்வகட்சி அரசாங்த்தில் அவசியமானவை என முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது விடயமாமாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
நாட்டை மீளக்கட்டியெழுப்புகின்ற தேசிய வேலைத்திட்டத்தின் அடிநாதமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளை மாத்திரம் அவர் அழைத்துள்ளார் எனறே விளங்குகின்றது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
ஏனென்றால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத பதிவு செய்யப்பட்ட பல அரசியல் கட்சிகளுக்கும் உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளார்கள். அதேபோல் கடந்த பொதுத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கட்சிகளும் வெளியில் உள்ளன.
மேலும், பொதுத் தேர்தலில் போட்டியிடாது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேறு கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுக்க பாடுபட்ட கட்சிகளும் இருக்கின்றன. இனி ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய கட்சிகளும் வெளியில் உள்ளன. மறுபுறத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கன்ற கட்சிகள் மீதும், அவற்றின் எம்.பிக்கள் மீதும் மக்கள் நம்பிக்கையீனத்தையே பெரிதும் வெளிப்படுத்துகின்றனர்.
மேலும், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. எனவே, கடந்த மடாகாண சபைத் தேர்தலில் மக்களாணையை பெற்ற கட்சிகளையும் சர்வகட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என கோரிநிற்கின்றோம்.
ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க வருமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.
அதேபோல் புத்தி ஜீவிகள், தொழிற் சங்கவாதிகள், நாட்டுப் பற்றாளர்கள், பொதுநல செயற்பாட்டாளர்கள் ஆகியோரையும் உள்வாங்கிக் கொண்டு சர்வகட்சி அரசாங்கம் பயணிக்க வேண்டும்.
புத்திஜீவிகள் போன்றோரின் பங்கு, பங்களிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்காகவே தேசிய பட்டியல் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆனால், தேசிய பட்டியலில் இன்று நாடாளுமன்றம் வந்திருப்பவர்களின் அநேகரை காட்டிலும் பெறுமதி வாய்ந்தவர்கள் வெளியில் நிற்கின்றனர் என்பது இந்நாட்டின் துயரமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)