
posted 19th August 2022
கௌரமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் நூறு நாட்கள் வேலை திட்டம் ஒன்றை வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்;
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் மக்கள் குரலாக இடம்பெற்று வரும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இலுப்பைக்கடவையில் புதன்கிழமை (17) 17 வது நாட்களாக முன்னெடுத்துள்ளோம்.
தமிழ் மக்களாகிய நாங்கள் கௌரமான அரசியல் தீர்வையே முன்வைத்து இந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இங்கு மக்கள் இது தொடர்பாக பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் நாங்கள் கிராமம் கிராமமாகச் சென்று கௌரமான அரசியல் தொடர்பான கருத்துக்களை கேட்டு அறியும்போது மக்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து வருவதால், இது அரசியல் தீர்வு தொடர்பாக அரசியல் வாதிகளின் கருத்துக்கள் மாத்திரமல்ல மக்களின் அபிப்பிராயங்களும், ஐ.நா சபை அறிந்து கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பாக அமையும் என 'மெசிடோ' நிறுவன இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)