
posted 10th August 2022
"இலங்கை நாட்டில் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. 'கோட்டா கோ கம'வில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைதுசெய்து விசாரிக்கவும் அரசு முயற்சித்துள்ளது."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரச அடக்குமுறையை நிறுத்துமாறும், அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறும் கோரி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள் கிழமை (08) நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
"எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு அரசு இந்நாட்டின் சிறைச்சாலைகளை இளைஞர்களால் நிரப்பும் நோக்கில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசால் முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அரசால் முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறையையும், அரச மிலேச்சத்தனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மர்மமான முறையில் இளைஞர்கள் காணாமல் போவதன் பின்னணியில் உள்ள இயக்கி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)