இராணுவ முகாமை அகற்றுக! நிந்தவூர் பிரதேச சபைக் கட்டிடத்தை ஒப்படைக்க

“நிந்தவூர் பிரதேச சபைக்குச் சொந்தமான முன்னைய நிருவாகக் கட்டிடத்தில் இயங்கும் இராணுவ முகாமை அகற்றி, உரிய கட்டிடத்தை பிரதேச சபைக்கு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு கோரும் தீர்மானம் ஒன்று நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகளை இதற்கு ஆவன செய்யுமாறு கோரும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில், கடந்த செவ்வாய்க் கிழமை (30) சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அமர்வில் குறித்த இராணுவ முகாம் அமைந்திருக்கும் சபைக்குச் சொந்தமான கட்டிடத் தொகுதி பிரதேச மக்கள் நலன் கருதிய செயற்திட்டமொன்றுக்கெனத் தேவைப்படுவதாகவும், எனவே இராணுவ முகாம் அகற்றப்பட்டு, சபையிடம் கட்டிட வளாகம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தவிசாளர் தாஹிர் சபை உறுப்பினர்களின் கவனதத்திற் கொண்டு வந்து பிரஸ்தாபித்ததுடன், இதற்கான தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டுமெனவும் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.

இந்த பிரேரணையை முன்மொழிந்து தவிசாளர் தாஹிர் சபையில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நிலவிய சூழ்நிலையைக் குறிப்பிட்டும், தமிழ்த் தீவிரவாதிகள் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடத்தலாமென்பதாலும், நிந்தவூர்ப் பிரதேசத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு சில மாதங்களுக்கு மட்டும் இராணுவ முகாம் தற்காலிகமாக இயங்குமென உறுதியளித்தே சபைக்குரிய கட்டிடம் பெறப்பட்டது.

ஆனால் அளித்த வாக்குறுதி மீறப்பட்டு நீண்ட காலமாக இந்த தற்காலிக முகாம் எமது கட்டிடத்தில் நீடித்து வருவது விசனிக்கத்தக்க விடயமாகும்.

இந்த முகாமை அகற்றி சபைக் கட்டித்தை ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட இராணுவ மேலதிகாரிகளுக்கு சபை மூலம் கடிதங்களனுப்பியும் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த கட்டிடத்தையும், உரிய காணியையும் சுவீகரித்து, சபைக்கு நஷ்டஈடு தருவதற்கான திட்டமொன்றுள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைக்கின்றது.

இதேவேளை இந்த முகாமுடன் இணைந்ததாக எமது சபை அனுமதியின்றி சட்ட விரோதமாக சிற்றுண்டிச்சாலை ஒன்றையும் திறந்து இராணுவத்தினர் வியாபார நடவடிக்கை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர். இதற்கென சுற்று மதிலும் உடைக்கப்பட்டுள்ளது.

எனவே உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் கால நீடிப்பு செய்யாது இராணுவமுகாமை அகற்றி சபைக் கட்டிட வளாகத்தை இராணுவத்தினர் மீளவும் சபையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
இந்த விடயம் குறித்த கோரிக்கைத் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இராணுவ முகாமை அகற்றுக! நிந்தவூர் பிரதேச சபைக் கட்டிடத்தை ஒப்படைக்க

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)