இடம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர் டேவிட் ஜோன் அனோஜனுக்கு தேசத்தின் அடையாளம் விருது.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் குரல் என்ற மாபெரும் அமைப்பு அண்மையில் நடத்திய விருது வழங்கும் விழாவில் தமிழ் நாட்டில்இ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் டேவிட் ஜோன் அனோஜன் என்பவருக்கு இவரது சேவைகளைப் பாராட்டி தேசத்தின் அடையாளம் என்ற தலைப்பின் கீழ் சமூக சேவகர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கை மற்றும் நாடு திரும்புதல் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் சமூகத்தின் பார்வைக்கும் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்வு காணும் முனைப்பில் குரலற்றவர்களின் குரலாய் தொடர்ந்து இயங்கி வருவதையிட்டும், மறுவாழ்வு முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கிராமங்களில் வசித்துவரும் இந்திய மக்களிடையேயும் உயர்கல்விக்கு ஆலோசனை வழங்குதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை சாமானியர்கள் எப்படி பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது போன்ற சமூக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதையிட்டும் இவருக்கு 'தேசத்தின் அடையாளம் விருது.' வுழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி. சேகர் , நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர். பாஸ்கரன் , மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் , லயன்ஸ் இன்டெர்நேசனல் அமைப்பின் துணை கவர்னர் எம். ஸ்ரீதர் , முன்னாள் தமிழக காவல்துறை ஆணையர் எம். கருணாநிதி , காவல்துறை துணை ஆணையர் திரு.ஜி. பாலசுப்பிரமணியம் , சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர். நாராயண வீரப்பன் , அட்வகேட் பி. நாராயணன் , கவிஞரும் எழுத்தாளருமான திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி போன்றவர்கள் கலந்துகொண்டு விருது வழங்கி சிறப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்து.

டேவிட் ஜோன் அனோஜன் என்பவர் தனது எட்டு வயதில் தனது பெற்றோருடன் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக தமிழ்நாட்டிற்கு 1990 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர் டேவிட் ஜோன் அனோஜனுக்கு தேசத்தின் அடையாளம் விருது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)