விவசாய காணிகளை உடனடியாக பகிர்ந்தளியுங்கள் - ஒன்றியத் தலைவர் வி.எஸ் .சிவகரன்
விவசாய காணிகளை உடனடியாக பகிர்ந்தளியுங்கள் - ஒன்றியத் தலைவர் வி.எஸ் .சிவகரன்

வி .எஸ். சிவகரன்

பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய உள்ள பயனாளிகளுக்கு விவசாய காணிகளை பகிர்ந்தளியுங்கள்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஏலவே பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக இரண்டு ஏக்கர் வீதம் காணி வழங்குவதுடன், கடந்த நல்லாட்சி காலத்தில் தனி நபர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட குறிப்பிட்ட காணியை துப்பரவு செய்வதையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும், மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி .எஸ். சிவகரன் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு அனுப்பியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.

சிவகரன் காணி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு முறையாக காணி கச்சேரியும் நடைபெற்றுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்புடன் பல கலந்துரையாடல்களும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது என்பதையும் ஆவணங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

அத்துடன் பிரதேச செயலாளரினால் பலமுறை எழுத்து மூலம் கொடுக்கப் பட்ட பெயர் பட்டியலின்படி இரண்டு ஏக்கர் வீதம் வழங்குமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணக்கமும் காணப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

ஆனால், இதுவரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக, தற்போது, காணி சீர்திருத்த ஆணைக்குழு வெளி மாவட்டங்களை சேர்ந்த தனி நபர்களுக்கு நூறு ஏக்கறுக்கு மேல் வழங்கியுள்ளதால் அவர்கள் தற்போது காணி துப்புரவாக்கும் பணியில் ஈடுப பட்டு வருகின்றனர். இவ் அனுமதி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டதாகவும் அறிகிறோம்.

எனவே தனி நபர்களின் காணி துப்புரவாக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வேண்டுமெனவும், அக் காணிகளை ஏலவே பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக இரண்டு ஏக்கர் வீதம் காணி வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இந்தப் பயனாளிகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்கள் என்பதையும் இத்தால் அறியத் தருகின்றோம். பின்னர் காணிகள் இருந்தால் ஏனையவர்களுக்கு வழங்குங்கள் என அவர் அனுப்பியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர் (வடமாகாணம்), தலைவர் மாவட்ட அபிவிருத்திக் குழு, மன்னார் அரசாங்க அதிபர், தலைவர் காணி சீர்திருத்த ஆணைக் குழு (கொழும்பு), பிரதேச செயலாளர் (மாந்தை மேற்கு), தலைவர் விவசாய அமைப்பு அந்தோனியார்புரம், செயலாளர் விவசாய அமைப்பு அந்தோனியார்புரம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விவசாய காணிகளை உடனடியாக பகிர்ந்தளியுங்கள் - ஒன்றியத் தலைவர் வி.எஸ் .சிவகரன்

வாஸ் கூஞ்ஞ