
posted 29th August 2021
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியல் பேராசிரியராகவும்,
இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியல் பேராசிரியராகவும்,
தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி சிவமதி சிவச்சந்திரன் பயிரியல் பேராசிரியராகவும்,
பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி கந்தசாமி விக்னரூபன் பௌதிகவியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனத்துக்கான தேவைப்பாடுகளை நிறைவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
மதிப்பீடுகளின் படியும், தெரிவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் நான்கு பேரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பேரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.

எஸ் தில்லைநாதன்