
posted 13th August 2021


கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பலாப்பழ வியாபாரம் களைகட்டி வருகின்றது.
இந்த மாவட்டங்களின் பிரதான வீதிகளின் மருங்குகளில் முக்கிய நகரமெங்கும் பலாப்பழ விற்பனையில் பலர் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தைப் பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொடிகாமம், சாவகச்சேரி போன்ற பிரதேசங்களுக்குச் சென்று பலாப்பழங்களைக் கொள்வனவு செய்து கொண்டு வருவதாக குறித்த பலாப்பழ வியாபாரிகள் தெரிவிக்கும் அதேவேளை, சிங்களப் பிரதேசங்களான பிபிலை, மொனறாகல, சியம்பளாந்துவ போன்ற பிரதேசங்களிலும் பலாப்பழ “சீஸன்” ஆரம்பித்துள்ளதால் அப்பகுதிகளுக்குச் சென்றும் சில வியாபாரிகள் பழங்களைப் பெற்று வந்து விற்பனை செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய பழங்களைக் கூட யாழ் பழங்கள் என கூறி விற்பனை செய்வோரும் உள்ளனர்.

எனினும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலிருந்து கொண்டு வரப்படும் பலாப்பழங்கள் தனிச்சுவை கொண்டவையாக இருப்பதால் யாழ் பழங்களை வாங்கி சுவைப்பதிலேயே பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதனால் யாழ் பலாப்பழங்களுக்கிருக்கும் தனி மவுசைப் பயன்படுத்தி சில பலாப்பழ வியாபாரிகள் கொள்ளை இலாபமீட்ட முனைந்துள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தகைய வியாபாரிகள் ஒரு பலாப்பழத்தை நான்கு அல்லது எட்டுத் துண்டுகளாக வெட்டி, துண்டு துண்டுகளாக கூடிய விலைக்கு அதாவது ஒரு துண்டு 150 ரூபா முதல் 250 ரூபா வரைக்கும் விற்று பெறும் இலாப மீட்டியும் வருகின்றனர்.

எனினும் சந்தையில் பலாப்பழ விலையேற்றம் மற்றும் வாகன போக்குவரத்து செலவீனம் காரணமாக இப்படி விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் நியாயம் கற்பிக்கின்றனர்.
நாட்டின் மிக மோசமான நிலையிலுள்ள கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்கவரத்து மிக இறுக்கமான நிலைக்கு வருமானால் இந்த களைகட்டியுள்ள பலாப்பழ வியாபாரம் எச்சந்தர்ப்பத்திலும் தடைப்படலாமெனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நிலையால் சுய தொழில் செய்து நாளாந்த வருமானம் ஈட்டிவரும் பலரது தொழில் முடங்கி, வருமான இழப்பை சந்திக்க வேண்டிய அவசல நிலமையும் ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்பலாப்பழங்களின் சுவையோ, தனிச்சுவைதான்!

ஏ.எல்.எம். சலீம்