முதலாவது தடுப்பூசி மன்னாரில் முற்றுப்பெற்றது
முதலாவது தடுப்பூசி மன்னாரில் முற்றுப்பெற்றது

மன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்ட யாவருக்கும் முதலாவது தடுப்பூசி வழங்கல் நிறைவுற்றுள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் 023222291 என்ற தொலைபேசி இலக்கத்துடன் காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள்

- பணிப்பாளர் த.வினோதன்-


மன்னார் மாவட்டத்தில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 57,626 பேருக்கு முதலாவது தடுப்பூசியாக சினோவாம் மற்றும் பைசல் வழங்கப்பட்டன. தடுப்பூசிகள் போடப்பட்டாலும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மருதமடு மாதா விழாவை முன்னிட்டு அங்கு கலந்து கொள்ளச் செல்லும் பக்தர்கள் வழிபாடுகள் நிறைவுற்றதும் கூட்டமாக இருக்காது உடனடியாக தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார்.

புதன்கிழமை (11.08.2021) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் நடாத்திய ஊடக சந்திப்பின்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் முப்பது வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டபொழுதும் மக்கள் மிக்க கவனத்துடன் சகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இதேவேளை நேற்று முன்தினம் திங்கள் கிழமை (09)) முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சினோவாம் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட்டு தற்பொழுது பைசல் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது தடுப்பூசி செவ்வாய் கிழமை (10.08.2021) மாலை வரை சுமார் 7000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, சினோவாம் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளத் தவறியவர்கள் 023222291 என்ற தொiபேசி இலக்கத்துடன் காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை உடனடியாகத் தொடர்பு கொண்டு தத்தமக்குரிய ஒரு விஷேட தினத்தை ஒதுக்கி இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், செவ்வாய் கிழமை (10) மன்னார் பகுதியில் புதிதாக 17 பேர் கொவிற் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 10 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் 07 பேர் மாந்தை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்;பட்ட அன்ரிஐன் பரிசோதனையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக 1221 பேரும் 2021ம் ஆண்டு 1204 பேரும் இந்த மாதம் 180 பேரும் அத்துடன் புத்தாண்டு கொத்தனியுடன் தொடர்புடைய 829 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் 1233 பிசீஆர் பரிசோதனைகள் இந்த மாதம் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 27,069 பிசீஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ள்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் பெறப்பட்டாலும் அனைவரும் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றிவர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக நடைபெற இருக்கும் மடுமாதா உற்சவ இக்காலப் பகுதியில் உற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள் மிக கடுமையான முறையில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வழிபாடுகள் நிறைவுற்றதும் இயன்றளவு அவ்விடத்தை விட்டு அகன்று செல்வது விரும்பத்தக்கதாகும்.

தற்பொழுது வழங்கப்படும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பேசாலையில் சென்.மேரிஸ் மற்றும் பற்றிமா பாடசாலைகளிலும், வங்காலையில் புனித ஆனாள் தேவாலயத்தில் காலையிலும், மதியத்தின் பின்னர் அச்சங்குளத்திலுள்ள புனித யோசேப் தேவாலயத்திலும் ,மாந்தை மேற்கு பகுதியிலுள்ள தடுப்பூசிகள் விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலையிலும், முசலி பகுதியில் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையிலும், மடுவில் மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், வியாழக் கிழமை (12) மன்னார் நகரத்தில் சித்திவிநாயகர் இந்து கல்லூரியிலும், சென் சேவியர் மகளீர் கல்லூரியிலும், நானாட்டானில் டிலாசால் பாடசாலையிலும் மாந்தை மேற்கில் விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலையிலும் மடுப் பகுதியில் தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்திலும், முசலி பகுதியில் மறிச்சிக்கட்டி மகா வித்தியாலயத்திலும் இத் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.

முதலாவது தடுப்பூசி மன்னாரில் முற்றுப்பெற்றது

வாஸ் கூஞ்ஞ