மன்னாரில் கொரோனா நோயாளர்களின் இறப்பு விகிதாசாரம் குறைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இறந்தவர்களின் தொகை தொடர்ந்து 13றாகவே காணப்படுவதுடன் இது 0.91 வீதத்திலிருந்து 0.90 ஆக குறைந்துள்ளதாகவும்,
மன்னார் மாவட்டத்தில் ஆவணி மாதம் இதுவரை 405 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை (22) வெளியிட்டிருக்கும் தனது அறிக்கையில்;

மன்னார் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 20 பேரின் முடிவுகள் கிடைக்கப் பெற வேண்டிருக்கின்ற நிலையில் 22.08.2021 அன்று கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையில் 06 நபர்களுக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

இவர்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளிகளில் இனம் காணப்பட்டவர்களில் 05 நபர்களும் முருங்கன் வைத்தியசாலையில் ஒருவருமாக மொத்தம் ஆறு பேர் ஞாயிற்றுக் கிழமை (22) இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இந் நடப்பு வருடத்தில் இதுவரையும் இந் நோயாளர்களின் எண்ணிக்கை 1440 ஆக இருந்து கொண்டிருக்கையில், சமீபமாக இதன் எண்ணிக்கை 1429 ஆக அதிகரித்துள்ளது எனவும், இதில் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை 1043 பேரும் வைத்தியசாலைகளில் கண்டுபிடிக்கப்பட்டவைகள் 386 நபர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் (ஆவணி) இதுவரை 1573 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 22.08.2021 அன்று மன்னாரில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும், ஆனால், மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 27,409 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இறந்தவர்களின் தொகை தொடர்ந்து 13 ஆகவே காணப்படுவதுடன் இது 0.91 வீதத்திலிருந்து 0.90 ஆக குறைந்துள்ளதாகவும் அவரின் அறிக்கை தெரிவிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கொரோனா நோயாளர்களின் இறப்பு விகிதாசாரம் குறைந்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ