
posted 29th August 2021
இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக மிகவும் சூட்சயமான முறையில் கடத்திவரப்பட்ட கேரளா கஞ்சாவை மன்னாரிலிருந்து வெளி மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது, கூலர் வாகனமும், இரு சந்தேக நபர்களும் முருங்கன் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (28.08.2021) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்;
வங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. சுமணவீரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். எம். லயனல்,பொலில் பரிசோதகர் குமார, உதவி பொலிஸ் பரிசோதகர் உப்பாலி செனவிரத்ன, மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் திசானாயக்க தலைமையிலான அணியினரே இக் கடத்தலை முறியடித்தனர்.
மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருங்கன் பிரதான வீதியின் பொலிசாரின் வீதித் தடை சோதனையில் குறிப்பிட்ட கூலரை சோதனையிட்டபோது அதிலிருந்து 183கிலோ 715கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் மறைத்து கொண்டு சென்ற போதே கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இது தொடர்பாக கண்டி மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.