மனித உயிர் இறைவனின் கொடை - ஆயர்
மனித உயிர் இறைவனின் கொடை - ஆயர்

மனித உயிர் இறைவனிடமிருந்து கிடைக்கப்;பெற்ற ஒரு கொடை. இருந்தும் ஒரு தாயின் கருவிலுள்ள உயிரை எத்தனையோ பேர் அழிக்கின்றனர். அத்துடன் அழிக்கவும் படுகின்றது. எமது உடலை மாண்புக்குரியதாகவும் மாசுபடா வண்ணம் தூயதாக பாதுகாப்பதும் எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை என நாம் உணர்ந்து வாழ்வோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மரியன்னை விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (15.08.2021) மருதமடு ஆலயத்தின் பெருவிழாவின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இங்கு தொடர்ந்து தனது மறையுரையில்;

மருதமடு திருச் செபமாலை அன்னையின் பரிந்துரையால் உங்களால் முன் வைக்கப்படும் விண்ணப்பங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறை தந்தையினால் அவைகள் அருளாப்படுவதாக.

இந்த உலகத்திலே எத்தனையோ பெண்கள் பிறந்திருக்கின்றார்கள். வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் ஒரேயொரு பெண் மாத்திரமே வரலாற்றில் கடவுளிடமிருந்து மாபெரும் விண்ணகத்துக்கான பேற்றினை பெற்றவர். அவர்தான் கன்னி மரியாள்.

இதற்கு காரணம் அன்னை மரியாளிடம் என்றும் மாறாத இறை நம்பிக்கையாகும்.

திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1950 ம் ஆண்டில் புனித கன்னி மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாள் என்ற திருச்சபையின் படிப்பினையை ஒரு நம்பிக்கையின் கோட்பாடாக அறிவித்தார்.

ஆன்மாவிலும் உடலிலும் கிறிஸ்துவுடன் பங்குபற்றி முதல் பெண் கன்னி மரியாள் என்பதை மரியன்னையின் விண்ணேற்பு இன்றைய விழா எமக்கு எடுத்தியம்புகின்றது.

இவ்வுலகில் வாழும் நாம் விண்ணகத்துக்குச் செல்வதில் அக்கறை கொண்டவர்களாக வாழ வேண்டும். எமது உடலுக்கும் ஒரு மகிமை இருக்கின்றது என்பதை இவ் விழா எமக்கு உணர்த்துகின்றது. ஆகவே நாம் இதை இழந்து விடக்கூடாது.

இன்று எமது நாட்டிலே மனித உயிருக்கும் மனித உடலுக்கும் எதிராக எத்தனையோ அநியாயங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்வோமானால் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க எமது சமூதாயம் தவறுகின்றது. இன்று நாம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். மனித உயிர் இறைவனிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கொடை. இருந்தும் ஒரு தாயின் கருவிலுள்ள உயிரை எத்தனையோ பேர் அழிக்கின்றனர். இது இறைவனுக்கு எதிரான விடயம் என்பதை உணராது இந்த சமூகம் செயல்படுகின்றது.

இன்று நாம் நாளாந்தம் கேட்கும் செய்திகளில் முக்கிய ஒன்றானது கொலையாகவே காணப்படுகின்றது. மனிதனை மனிதன் மதிக்காது, மனிதனின் மாண்புக்கு மதிபளிக்காது ஏற்படும் சண்டை சச்சரவினால் மனித உயிரையே அழிக்கும் அளவுக்கு மிகவும் கீழ்தரமான கொலைகள் இடம் பெறுவதை நாம் அறிந்து வருகின்றோம்.

எமது முதியோரை, குழந்தைகள் மற்றும் நோய் வாய்பட்டுள்ளோரை ஆதரித்து கனம் பண்ணவும் நாம் கமைப்பட்டுள்ளோம். இது எமது தலையாய கடமையாகும்.

இவ்வாறு தவறும் பட்சத்தில் சமூதாயம் இவர்களை கவனிக்கும் நோக்குடன் இவர்களுக்கு என நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

மரியன்னை ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டதிலிருந்து உடலுக்கு அவ்வளவு பெருமையுண்டு. இதிலிருந்து எமது உடலும் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கின்றது என்பது எமக்கு உணரக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இன்று மனிதன் ஒருவரின் உடலை வாளால் வெட்டுகின்றான். துப்பாக்கியால் சுடுகின்றான். இவ்வாறு மக்களின் உடல்கள் சிதறடிக்கப்படுகின்றது.

இன்று எமது ஆலயங்களிலும் வெவ்வேறு பேர் தன்னலமாக தமது திட்டங்கள் நிறைவேறவும், பணம் கொடுத்து மற்றவர்களின் உயிர்களை பறிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

எமது நாட்டில் இவ்வாறு சம்பவங்கள் இடம் பெறுவதால் இப்படியான சக்திகள் வேறு நாடுகளின் உதவியுடன்தான் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இறைவன் எமக்கு வழங்கியுள்ள நல்ல உடலை மது, போதை வஸ்து பாவனைகளால் இன்னும் பலவிதமான காரணத்தினால் தங்கள் உடல்களை மாசுப்படுத்துகின்றனர்.

ஆகவே நாம் எமக்கு இறைவன் தந்த உடலை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தவறான பாலியல் செயல்பாடுகளும் உடலை மாசுப்படுத்துகின்றன. பாலியல் உறவானது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மட்டுமே இருக்க வேண்டுமேயொளிய ஏனையவைகள் உடலை மாசுப்படுத்துகின்றன.

ஆகவே நாம் எமது உடலை மாண்புக்குரியதாகவும் மாசுபடா வண்ணம் தூயதாக பாதுகாப்பதும் எமது தலையாய கடமை என நாம் உணர்ந்து வாழ்வோம்.

ஆகவே மரியன்னையின் நம்பிக்கையில் நாமும் வளர்ந்து நமது ஆன்மாவையும் உடலையும் தூயதாக வைத்திருக்க நாம் முயற்சிகள் எடுப்போம் என இவ்வாறு தனது மறையுரையில் ஆயர் தெரிவித்தார்.

மனித உயிர் இறைவனின் கொடை - ஆயர்

வாஸ் கூஞ்ஞ