
posted 19th August 2021

“கொவிட் - 19 வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடும் நிலையிலும், கொவிட் மரணங்கள் அதிகரித்து வருவதனையும் உணர்ந்து செயற்படாது பொது மக்கள் கொவிட் தடுப்பு சுகாதார வழிமுறைகளை அசட்டை செய்து நடப்பது கவலையளிக்கின்றது”
இவ்வாறு, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் கவலை தெரிவித்துள்ளார்.
நிந்தவூர்ப் பிரதேசத்தில் கொவிட் மூன்றாம் அலைவரை 14 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளதுடன். இதுவரை இப் பிரதேசத்தில் 481 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.
இன்றைய கொவிட் தொற்று காலத்தில், அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமன்றிஇ பொது மக்கள் வெளி நடமாட்டத்தை வெகுவாகக் குறைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் விடுத்துள்ள அவசர அறிவித்தலில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் எமது நிந்தவூர் பிரதேசத்திலும் இந்நிலைமை கவலைக்கிடமாக இருப்பது கவலைக்குரியவிடயமாகும்.
தொற்றாளர்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் வைத்திசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வரக்கூடிய அபாய நிலைமை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
எனவே இனிமேலாவது நாம் அனைவரும் எமது அலட்சியப் போக்கினைவிடுத்து அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் சுகாதாரவிதிமுறைகளுடன் வெளியில் நடமாடுவதன் மூலமும் ஏனைய நேரங்களில் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதன் மூலமும் கொடிய கொரோனா மரண அபாயத்திலிருந்து எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்வோம்.
ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வதால் மாத்திரமே கொரோனா தொற்றை இல்லாதொழிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்