பாதயாத்திரிகர்களாக மடுவுக்கு வரும் பக்தர்களுக்குத் தடை

திருவிழாவை முன்னிட்டு மடுவுக்கு பாதயாத்திரிகர்களாக வருவோரை தடைசெய்யும்படி அரச அதிபர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம் அறிவிப்பு

மன்னார் மறை மாவட்டத்தின் மருதமடு அன்னையின் பக்தியின் நிமித்தம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பாத யாத்திரிகர்களாக புறப்பட்டு வந்து திருவிழா அன்று தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு இவ்வருடமும் முனைந்திருப்பதால் இன்றைய சூழலில் இவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாக தங்கள் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு தெரியப்படுத்துமாறு வட மாகாண சகல அரச அதிபர்களுக்கும் மன்னார் மாவட்ட செயலகம் தெரியப்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகமும், கிறிஸ்தவ விவகார திணைகளமும் மன்னார் மறைமாவட்டத்துடன் இணைந்து மேற் கொள்ளும் மருதமடு பெருவிழாவின் ஆவணி பெருவிழா தொடர்பான கலந்துரையாடலானது மடுத்திருதத்லத்தில் புதன்கிழமை (11.08.2021) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை உட்பட இதன் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தற்பொழுது நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்று நோய் காரணமாக எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் மடு அன்னையின் பெருவிழாவானது அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க முல்லைத்தீவு மற்றும் யாழ் பகுதிகளிலிருந்து பல பக்தர்கள் மடு அன்னையிடம் பெற்றுக்கொண்ட வரங்களின் பிரதி பலனாக வருடந்தோறும் தங்கள் பகுதிகளிலிருந்து பாத யாத்திரிகர்களாக வந்து பெருவிழா அன்று தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழமையானதாகும்.

இதற்கமைய இவ் வருடமும் இவ்வாறான செயல்பாடுகளில் பலர் இறங்கியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகம் வட மாகாணத்திலுள்ள சகல அரசாங்க அதிபர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாவது; தற்பொழுது நாட்டில் மிக மோசமாக நிலவி வரும் கொரோனா அச்சம் காரணமாக மடு பெருவிழாவன்று குறிப்பிடப்பட்ட பக்தர்கள் மட்டுமே ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவதுடன் ஆலயம் வருவோர் அயல் கிராமங்களுக்குள் செல்லவோ, இப்பகுதியிலுள்ள குளிக்கும் குளங்களில் குளிப்பதற்கோ தங்குவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தீர்மானிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து விழாவுக்காக வெளியிலிருந்து வருவோரை தடைசெய்யும்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பாதயாத்திரிகர்களாக மடுவுக்கு வரும் பக்தர்களுக்குத் தடை

வாஸ் கூஞ்ஞ