
posted 24th August 2021

நீதி அமைச்சர் அலி சப்ரி
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசியை முஸ்லிம்கள் அனைவரும் செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (24-08-2021) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது நாட்டில் இதுவரை ஏழாயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரு வீதமானோர் மாத்திரமே கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களாவர். அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் 63 பேர் மாத்திரமே இறந்துள்ளனர். இவர்களுக்கு நீண்ட கால நோய்களும் இருந்துள்ளன. ஏனைய 99 வீதமானோர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்வது யாதெனில், கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதன் மூலம் அல்லாஹ் முந்தி இரண்டாவது எமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதாகும். மருத்துவம் என்பது நோய் நிவாரணம் பெற இறைவன் காட்டிய வழிமுறையாகும்.
இன்று எம் கண்முன்னே எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் பலர் தினமும் கொவிட் தொற்றினால் மரணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம்கள் நாற்பது, ஐம்பது பேரளவில் உயிரிழந்து வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிய வருகிறது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் இதனை என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தடுப்பூசி ஏற்றுக்கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்ட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் தரப்பினர் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஹராமான (தடுக்கப்பட்ட) விடயமல்ல. உலகில் உள்ள 51 முஸ்லிம் நாடுகளும் கொவிட் தடுப்பூசியை அங்கீகரித்து, தமது மக்களுக்கு செலுத்தி வருகின்றன. சில அரபு நாடுகளில் பிள்ளைகளுக்குக் கூட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. எமது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும் கூட தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டதே இக்கொவிட் தடுப்பூசியாகும். இதில் எவ்விதமான பாதக விளைவுகளும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையினால் இது விடயத்தில் எவரும் எவ்வித சந்தேகமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை.
எனவே, உடனடியாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்று, தம்மையும் தமது குடும்பத்தினரையும் கொரோனா மரணத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.
விடயங்களைத் தெரிந்து கொண்டும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதிருப்பது தற்கொலை செய்வதற்கு ஒப்பானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்