
posted 25th August 2021

அரசால் வழங்கப்பட்டு வரும் இரண்டாயிரம் ரூபாவை எந்த கொடுப்பனவுகளும் பெறாத மக்களுக்கு சம்பிரதாய முறைப்படி வழங்கிய வைபவத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் சொன்னதாவது;
சில சமயம் நமக்கு தேவையென ஒன்று தோன்றினாலும் அது தற்பொழுது தேவையில்லையென உணர்ந்து எவற்றெல்லாம் தவிர்க்க முடியுமோ அவைகளை தவிர்த்து கொரோன தொற்று அபாயத்திலிருந்து விலகிக்கொள்ள மிக கட்டுப்பாட்டுடன் இருக்கத் தெண்டியுங்கள்.
இந்நிகழ்வை மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் பெரியகடை கிராம அலுவலகர் பிரிவில் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டு திங்கள் கிழமை (23) ஒரு பயணாளிக்கு வழங்கி ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் மற்றும் பெரியகடை கிராம அலுவலகர் அந்தோனி செபமாலை அல்மெய்டா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நமது நாட்டில் நிலவி வரும் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பலரின் வேண்டுகோளுக்கு இணங்க எமது நாடு ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்ட நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு வாரங்களுக்கு மக்கள் அனைவரும் கொடிய கொரோனா தொற்றுக்கு உள்ளாதபடி வீடுகளில் தாங்களாகவே முடங்கி இருக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.
தற்பொழுது எமக்கு குறைவான நிதியே வந்து கிடைத்துள்ளது. இருந்தபோதும் பிரதேச செயலாளர்களிடம் உடனடியாக சரியான விபரங்களை இரவோடு இரவாக பெற்று மன்னார் மாவட்டத்துக்கு தேவையான நிதி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளேன்.
எமக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நிதியானது எமக்கு கிடைத்தவுடன் இன்றைய தினமே அனைத்தையும் தெரிவுக்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கப்பட் ட்டது. இன்னமும் வழங்கப்படாதவர்களுக்கு தேவையான நிதியை தற்பொழுது கோரியுள்ளளோம்.
நாம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாவரும் அறிந்ததே. ஆகவே இதனை கவனத்தில் கொண்டு தேவையற்ற முறையில் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று உங்களை வேண்டி நிற்கின்றேன்.
கண்ணுக்குத் தெரியாத இந்த தொற்று எங்கு இருக்கின்றது எங்கு இல்லையென கண்டுகொள்ள முடியாத ஒரு தொற்று நோயாக காணப்படுவதால் நாம்தான் நம்மையே காத்துக்கொள்ள வேண்டும்.
இறைவனில் நம்பிக்கை கொண்டவர்களாக வாழும் நாம் மன்னார் மாவட்டத்தில் குறைவான கொவிட் தொற்றாளர்களாகவும் இதன் இறப்புக்கள் குறைந்த மாவட்டமாகவும் இருக்கின்றபோதும் இனிவரும் காலங்களிலும் நாம் எமது சுகாதார நடைமுறைகளை ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலம் எமது மாவட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்து நிற்பதுடன், இக் கொடுப்பனவை பெறுகின்றவர்களுக்கு இது ஒரு பெரிய பணமாக இல்லாதிருந்தாலும் இது ஒரு ஆறுதல் தரும் தொகை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இறுதியாக, இந்தச் சிறுதொகைப் பணமானது அரசாங்கத்திலிருந்து எந்த உதவியும் பெறாதவர்களுக்குத்தான் வழங்கப் படுகிகின்றது என்பதை அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ