
posted 27th August 2021

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் முதலாம் கட்டமாக இடம் பெற்ற கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் சந்தரப்பத்தைத்தவறவிட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கென கல்முனைப் பிராந்தியத்திற்கு கடந்த வாரம் கிடைக்கப் பெற்ற இருபதாயிரம் தடுப்பூசிகள் பிராந்தியத்தின் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இதன்படி ஏற்கனவே முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்ட சமயம் தவறவிட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணித்தாய்மாரும் தற்போதய சந்தர்ப்பத்தையும் தவறாது பயன்படுத்தி முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொவிட் - 19 வைரஸ் பரவல் உட்பட கொவிட் மரணங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதைப் புறக்கணிக்கவோ, உதாசீனமாகக்கருதவோ எவரும் முற்பட வேண்டாமெனவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்திவருகின்றனர்.
இதே வேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை 163 கர்ப்பிணித்தாய்மார்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லையென பிராந்திய பணிப்பாளர் டாக்டர். சுகுணன் தெரிவித்தார்.
மேலும் விடுபட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருவதாக, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தெரிவித்தார்.
மீராநகர், அட்டப்பள்ளம், அரசடித்தோட்டம், வெளவாலோடை ஆகிய பிரதேசங்களில் இந்த தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்