
posted 17th August 2021

“வடக்கு, கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும். கூடிய வரையில் ஒரே சின்னத்தியே இவ்வாறு போட்டியிடும் பொற்காலம் மலர வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி ஆதங்கம் வெளியிட்டார்.
நிந்தவூரிலுள்ள அவரது பணி மனையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது அவர் தனது மேற்படி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கிழக்கிலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான ஹஸனலி தமிழ், முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வருபவராவார்.
செயலாளர் நாயகம் ஹஸனலி இந்த ஊடக சந்திப்பின் போது மேலும் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.
“நாற்பது வருடகால எனது அரசியல் வாழ்வில் ஒரே கொள்கையுடனேயே பயணித்து வருகின்றேன் எனவே எனக்கு முக்கிய கடப்பாடு இருக்கின்றது.
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமாக வடகிழக்கு அமைவதுடன் அதற்குள் நிலத்தொடர்புள்ள அதிகாரங்களை ஒற்றுமையாகப்புரிந்துணர்வுடன் பகிர வேண்டியநிலையில் நாமுள்ளோம்.
மொழிவாரியாக ஒன்றுபட்டுள்ள தமிழ்மக்களும், முஸ்லிம்களும் நிலத்தொடர்புள்ள பிராந்திய அரசியலுக்குள் இடையிலுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டுமேதவிர குரங்கு அப்பம் பங்கிட்டகதையாக மூன்றாம் தரப்பிடம் ஒப்புவித்து விடக் கூடாது என்பதில் நாம் முக்கிய கவனம் கொள்ள வேண்டும்.
பிரிபடாத இலங்கைக்குள் எமக்கு வாழும் உரிமை உண்டு என்பதையும் எவரும் மறுத்துவிடவும் முடியாது.
இதேவேளை தமிழ் அரசயில் தலைமைகளிடமுள்ள விழிப்புணர்வு, சமூக ஒருமைப்பாடும் இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமில்லை.
இதனால் குறிப்பாகக் கிழக்கு முஸ்லிம்களின் அதிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் இன்று சீரழிந்து போயுள்ளது. எம் முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதுடன், பகற்கொள்ளைக்கும் உட்பட்டுள்ளது.
கடந்த 20 வருடகாலமாகக் கிழக்கு முஸ்லிம் மக்கள் தலைமைத்துவம் கேட்காது கிழக்கிற்கு வெளியே விட்டுக்கொடுத்து வந்தோம். ஆனால் இதில் தோற்றுவிட்டோம்.
எமது இந்த விட்டுக்கொடுப்பால், கிழக்கில் அரசியல் சூதாட்டத்தில் எமது பலம் பறிபோய்விட்டதை ஏமாற்றத்துடனும், விசனத்துடனும் தெரிவிக்க வேண்டியுள்ளது.
எனவே தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். கிழக்கு முஸ்லிம்கள் பலப்படக் கூடாது என செயற்படுபவர்களின் கையிலிருந்து கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக கிழக்கின் முஸ்லிம் புத்தி ஜீவிகள், உலமாக்கள், சமூக ஆரவலர்கள் ஒருங்கிணைந்து எதிர்காலத்திற்கான தீர்மானங்களை எடுத்து சமூகத்தை வழிநடத்த முன்வர வேண்டும்.
அதேவேளை தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம்களை தனியே விடக்கூடாது. தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்குள் எம்மையும் இணைத்தே செயற்படுவதுடன், மொழி உரிமை என வரும் போது முஸ்லிம் சமூகத்தையும் புறக்கணித்துவிடக் கூடாது” இவ்வாறு ஹஸனலி கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்