
posted 14th August 2021

டாக்டர் சின்னத்துரை கதிரைவேற்பிள்ள காலமானார்
பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் யுத்த காலப் பகுதியில் மாவட்ட வைத்தியப் பொறுப் பதிகாரியாகப் பணியாற்றிய மதிப்புக்குரிய டாக்டர் சின்னத்துரை கதிரைவேற்பிள்ள அவர்கள் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக் கிழமை (13.08.2021) தனது 88 ஆவது வயதில் காலமானார்.
இவர், 1987 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் லிபரேசன் ஒப்பரேசன் நடவடிக்கையின் போது படுகாயமடைந்த பெருந்தொகையான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடுமையாக உழைத்தார். இதைத் தொடர்ந்து 1997 வரை இடம்பெற்ற யுத்த வன்முறைகளின் போது காயமடைந்த பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னின்று உழைத்தார்.
மேலும் இவர்1987இல் நடைபெற்ற லிபரேசன் ஒப்பரேசன் இராணுவ நடவடிக்கையின் போது ஷெல் அடி விமானக்குண்டு வீச்சுக்குகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வைத்தியசாலை சுற்றாடலில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வைத்தியசாலை வளவுக்குள் இடம் பெயர்ந்திருந்தனர். அந்நேர நெருக்கடிக்கு மத்தியிலும் இடம் பெயர்ந்த மக்களையும் அவர் பாதுகாத்திருந்தார். 2000ஆம் ஆண்டு வரையான சுமார் 20 ஆண்டுகளாக யுத்த நெருக்கடிக்களின் மத்தியில் தன்னலம் கருதாது மக்களுக்கு அளப்பரிய சேவை புரிந்துள்ளார். இவ் வைத்தியசாலையின் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றில் இவரது பணி முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
பருத்தித்துறை தம்பசிட்டியை பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் கதிரைவேற்பிள்ளை தனது இறுதிக் காலத்தில் தனது மகளுடன் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.

எஸ் தில்லைநாதன்