சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாததால் ஊரடங்குச்சட்ட முடக்கம்  செப்டம்பர் 6 வரை நீடிப்பு

கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்த சுகாதார வழிமுறைகளைப் பொது மக்கள் பின்பற்றாததால் ஊரடங்குச்சட்ட முடக்கம் அம்பாறை மாவட்டத்தில் செப்டம்பர் 6 வரை நீடிப்பு

கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்ட முடக்கத்தை அம்பாறை மாவட்த்தின் பல பிரதேசங்களிலும் பொது மக்கள் கடைப்பிடிப்பதில் அசிரத்தை சாட்டுவதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் கொவிட் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பொது மக்கள் ஒன்று கூடுவதையும், வீதிகள் தொறும் நடமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
பொது மக்களின் பொறுப்பற்ற இந்த செயற்பாடுகள் மூலம் கொவிட் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்த வண்ணமே உள்ளனர்.

இதேவேளை பொறுப்பற்றவிதத்தில் நடந்து கொள்ளும் பொது மக்களைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு தரப்பினரான பொலிஸாரும், இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளுடன் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிரதான வீதிகளில் கூட பொது மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட முடக்கத்தின் அர்த்தம் தான் என்ன? எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறினால் முடக்கக் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டொபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனவே முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் முடக்கக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டும் பயனில்லாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையுமென அமுல்படுத்தப்பட்ட தற்போதய தனிப்படுத்தல் ஊரடங்குச்சட்ட முடக்கம் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையும் அரசால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாததால் ஊரடங்குச்சட்ட முடக்கம்  செப்டம்பர் 6 வரை நீடிப்பு

ஏ.எல்.எம்.சலீம்