
posted 30th August 2021

மனுவேல் உதயசந்திரா
பெற்றார்களும், உறவுகளும் இரண்டாயிரம் (2000) நாட்களுக்கு மேலாக தங்களுடைய பிள்ளைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் வீதியில் நின்று ஏக்கத்துடன் போராடுவது வலுக்கட்டாயமாக காணாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளையும், உறவுகளையும் சர்வதேசம் மீட்டுத் தரும் அல்லது நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தான் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவேல் உதயசந்திரா தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திங்கள் கிழமை (30.08.2021) காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவேல் உதயசந்திரா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது;
கொரோனா முடக்க நிலையிலும் நாங்கள் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமாகிய இன்று பேச வேண்டிய தேவைக்குத் தள்ளப் பட்டதற்குக் காரணம், பல வருடங்களாக நாங்கள் காணாமல் போன உறவுகளை நினவுகூர்ந்தும், நீதி கேட்டும் சர்வதேசத்தின் உதாசீனமாய் இருப்பதும் தான். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தினம் தினம் போராடிடினும் எந்தவித நன்மையும் கிட்டியதாக இல்லை.
சர்வதேசம் எங்களுக்கு நீதியை பெற்றுத் தரும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்களிடம் திரும்பி வருவார்கள், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டாயிரம் (2000) நாட்களுக்கு மேல் தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் வீதியில் நின்று போராடுகிறார்கள். அப்படி இருந்தும் சர்வதேசம் உட்பட எவராலும் இன்னும் கண்டு கொள்ளாத நிலையே இன்னமும் காணக்கூடியதாக இருக்கிறது.
மேலும், ஜெனிவா பேச்சு வார்த்தையில் எங்களுக்கு கூடிய விரைவில் நீதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் சிங்கள மக்களில் எவரும் இங்கு காணாமல் ஆக்கப்படவில்லையே! ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருப்பதாக கூறுகிறார்கள்
அப்படியாயின் அரசாங்கத்திற்கு தெரியாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எப்படி வெளிநாடு செல்ல முடியும் என்பதையும் இவ்வேளையில் கேட்டு நிற்கின்றோம்?
வெளியில் செல்ல முடியாமல் ஒவ்வொரு தாய்மார்களும் இன்றைய நிலையில் வீட்டிலிருந்து தங்களுடைய பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கையிலே நாங்கள் இந்த விடயத்தை எவ்வாறு இலகுவாக விடமுடியும்? எமது பிள்ளைகள் உயிரோடு இருந்தால் எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள் இல்லையென்றால் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறுங்கள்?
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மன்னாரிலும் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் இரகசியமாக காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது ஏனெனில் சர்வதேச மனித உரிமை தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எம்மிடம் வந்து பதிவுகளை மேற்கொள்கின்றார்கள்.
நாங்கள் ஒரு போதும் காசுக்காக போராடவில்லை எங்களுடைய பிள்ளைகளின் நீதிக்காகவேதான் போராடுகின்றோம் அதை இந்த அரசாங்கமும் சர்வதேசமும் புரிந்துகொள்ள வேண்டும்.
எமது பிள்ளைகளுக்கு சர்வதேசம் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் இல்லை எனில் எதற்காக இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்ற ஒன்றை நினைவு கூர வேண்டும்?
சர்வதேசம் கொண்டு வந்த தினம் என்பதால் தான் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இன்று வீதியில் நின்று கண்ணீரோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடமாவது சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய் தந்தை உறவுகள் தினந்தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியெனில் இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய் தந்தை உறவுகள் என்று சாட்சியங்கள் அனைத்தும் இறந்து போகட்டும் நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சர்வதேசமும் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கின்றதா என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி மனுவேல் உதயச்சந்திரா அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்?

வாஸ் கூஞ்ஞ