
posted 27th August 2021

(வாஸ் கூஞ்ஞ) 27.08.2021
மன்னார் நறுவலிக்குளத்தில் வெளியோளர் மற்றும் உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவுகளாக இயங்கி வந்த மாவட்ட சித்த மருத்துவ மணையில் தற்பொழுது கொவிட் 19 நோயாளர்களின் சிகிச்சைக்கான இடைக்கால தங்கல் முகாம் ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்பொழுது உள்நோயாளர்கள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு வெளிநோயாளர் பிரிவு மட்டும் இயங்கும் என மருத்துவ அத்தியட்சகரும், மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் ஐந்து வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் சித்த மருத்துவ மனையானது ஆரம்பத்தில் வெளியோளர்களுக்கு மாத்திரம் சிகிச்சை அளித்து வந்தது.
இம் மருத்துவ மனையானது பின்னர் நாளடைவில் ஆண்கள், பெண்களுக்கென விடுதிகள் கொண்ட உள்நோயாளர் பிரிவாகவும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது கொவிட் 19 தொற்று நோய் காரணமாக இம் மருத்துவ மனையில் இயங்கி வந்த உள்நோயாளர்கள் பிரிவு தற்பொழுது மூடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் வெளிநோயாளர் பிரிவு தற்பொழுது தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகின்றது எனவும், அத்துடன் குறிப்பிட்ட நாட்களில் இடம்பெற்று வரும் சித்த மருத்துவ கிளினிக்குகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பகுதியிலுள்ள சித்த மருத்துவத்தை நாடும் நோயாளர்கள் சுதேச மருத்துவ சம்பந்தமான சந்தேகங்கள் ஏற்படின் கீழ்வரும் இலக்கத்துடன் அதாவது 0706800372 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு தங்கள் மருத்துவ சந்தேகங்களையும் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன் இவ்வாறு மேலும் தெரிவித்தார்.
இதேவேளையில் கொரோனா தொற்றாளர்களின் நலன் கருதி அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கான இடைத்தங்கல் நிலையமாக இம் மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கான புனருத்தான வேலைகள் தற்பொழுது இங்கு இடம்பெற்று வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இராணுவ அதிகாரிகளின் மனித வள ஒத்துழைப்புடன் இதற்கான வேலைத் திட்டம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.
இச் சித்த மருத்துவமனை மிக விரைவில் கொவிட் 19 நோயாளர்களுக்கான இடைத்தள முகாமாக ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ