கொல்லத்துரத்தும் கொரோனா! - நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி பொது மக்களுக்கு அறிவிப்பு
கொல்லத்துரத்தும் கொரோனா! - நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி பொது மக்களுக்கு அறிவிப்பு

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

“கொல்லத்துரத்தும் கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பில் பொது மக்களுக்கான அவசர அறிவுறுத்தல்களுடனான துண்டுப்பிரசுரமொன்றையும் இந்த அணி வெளியிட்டுள்ளது.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா மரணம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக, இப் பிரதேசம் அதிக தொற்று ஆபத்துள்ள சிவப்பு எச்சரிக்கை வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முற்றாக முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் குறித்த அனர்த்த முகாமைத்துவ அணி எச்சரித்துள்ளது.

நிந்தவூர் பிரதேசசபை, நிந்தவூர் பிரதேச செயலகம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆகியோருடன் மேற்படி நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி முன்னெடுத்த கலந்துரையாடலின் முடிவின்படி பொது மக்களுக்கான அறிவுறுத்தல் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

நாம் எங்கோ கேள்விப்பட்ட கொரோனா நோயும், கொரோனா மரணங்களும் இன்று எம் காலடியிலும் நிகழத் தொடங்கிவிட்டன.

நிந்தவூரில், கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டும் (இன்றுவரை) கொரோனா தொற்றுக் காரணமாக மரணித்தவர்கள் எண்ணிக்கை 14 யைக் கடந்து கொண்டிருக்கின்றது. தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 500 ஐ எட்டிக் கொண்டிருக்கின்றது. தொடர் பரிசோதனையில் பலர் தொற்றாளர்களாக நாளாந்தம் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தொற்றளர்கள் அதிகரிப்பதன் காரணமாக வைத்தியசாலைகள் இட நெருக்கடியினையும் ஊழியர் பற்றாக் குறையினையும், ஒட்சிசன் வாயுவின் தட்டுப்பாட்டையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிகரித்துவரும் மரணம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக எமது பிரதேசம் அதிக தொற்று ஆபத்துள்ள சிவப்பு எச்சரிக்கை வலயமாக (சுநன யுடநசவ யுசநய) அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் நாம் இன்னும் பல சிரமங்களை சுமக்க வேண்டிவரலாம். அதற்கு முன் நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை பேணி எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வரவேண்டும்.

கொல்லத்துரத்தும் கொரோனா! - நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி பொது மக்களுக்கு அறிவிப்பு

எனவே எதிர்நோக்கிவரும் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும், நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து மீளவும், சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களை இறுக்கமாகப் பேணி நடகுமாறு வேண்டுகின்றோம். எனவே;

1. அரசு அங்கீகரித்த அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும், வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள்.

2. மாஸ்கை (மூக்கையும் வாயையும் மூடி) முறையாக அணியுங்கள். குறிப்பாகப் பெண்களும் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்.

3. அத்தியாவசியவத் தேவைகளுக்காக வெளியே செல்லும் சந்தர்ப்பத்தில் சமூக இடைவெளிகளை இறுக்கமாகக் கடைப்பிடியுங்கள்.

4. சிறுவர்கள், வயோதிபர்கள், நாட்பட்ட நோயாளிகள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

5. மாணவர்களை ஒன்றுகூட்டி ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதையும், பெற்றோர் வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதையும் கட்டாயம் தவிர்ந்து கொள்ளுங்கள்.

6. வெளி மாவட்டங்களிலிருந்து (குறிப்பாக கொழும்பிலிருந்து) வருபவர்கள் தங்களை முறையான பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுங்கள்.

7. 60 வயதுக்கு மேற்பட்டும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடன் போட்டுக் கொள்ளுங்கள்.

8. குடும்ப ஒன்று கூடல்கள், மரண வீடுகளில் ஒன்று கூடுவது, வீதிகளில் ஒன்று சேர்ந்து நிற்பது, கூட்டமாக பயணிப்பது போன்ற விடயங்களை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. பொருள் விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் உரிய சுகாதார ஒழுங்கில் பொருள் கொள்வனவு மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.

10. உரிய சுகாதார ஒழுங்குகளைப் பேணாத தனிநபர்கள், விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் சமூகம் ஒன்று கூடும் இடங்களின் பொறுப்பாளர்கள் தங்கள் மீது சட்டரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கொல்லத் துரத்தும் கொரோனாவிளிருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக வேண்டி மேற்படி விடயங்களில் கூடிய அவதானத்தை செலுத்தி நடந்து கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லத்துரத்தும் கொரோனா! - நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி பொது மக்களுக்கு அறிவிப்பு

ஏ.எல்.எம்.சலீம்